என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கொத்து-கொத்தாக பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்
- ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.
- மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி:
சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், அரிய வகை மலர்செடிகள் மற்றும் மூலிகை செடிகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தாவர நாற்றுகளை நீலகிரிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்.
ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பானில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் ஆகியவை அதிகளவில் நடவு செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. அவை தற்போது கொத்து-கொத்தாக பூத்து குலுங்க தொடங்கி உள்ளது.
2-வது சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோத்தகிரி பகுதியில் அதிகமான குளிர் நிலவுவதால், இங்கு செர்ரி வகை பூ மரங்கள் நீரோடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி பனிக்காலம் வரை சாலையோரங்களில் அழகாக இலைகள் இன்றி நிற்கும் மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி பகுதியில் செர்ரி வகை பூ மரங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்களின் முன்பாக குடும்பத்தினருடன் நின்று செல்போனில் பரவசத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.






