என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
- விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், விஜய்யின் கருத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் கடுமையாக விசமர்சித்துள்ளனர்.
அதில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என்று ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என்று திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
விஜயை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் விமர்சித்ததால் அரசியல் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
- ரூ. 11.69 கோடியில் அறிவியல் ஆய்வகத் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
அதற்காக தமிழ்நாடு மாநிலக் கொள்கையைப் புதிதாக வடிவமைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு புதிய வரலாறு படைக்க இருக்கும் தமிழ்நாடு அரசின் புதிய இந்த மாநிலக் கல்விக் கொள்கை 2025 தமிழ்நாடு முதலமைச்சரால் 8.8.2025 அன்று வெளியிடப்பட்டு கல்வியாளர்களால் வரவேற்கப்படுகிறது.
இல்லம் தேடிக் கல்வி கொரோனா காலக்கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
2025–- 2026-ம் கல்வியாண்டில் 34 ஆயிரம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 5.986 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
28,067 அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 Mbps வேகமான இணைய வசதி வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகைசால் பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு ஆற்றல்கள் வளர்க்கப்படுகின்றன.
தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு ஆசிரியர்களுக்குப் பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இணைய வழி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ரூ. 11.69 கோடியில் அறிவியல் ஆய்வகத் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கணினி அறிவியல் பாடத் தனிக் கட்டணம் ரத்து, மகிழ் முற்றம், ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம், மாணவர்கள் ஆசிரி யர்களை ஊக்கப்படுத்தும் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா திட்டம், ரூ.658.17 கோடி நிதியுடன் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - திட்டத்தின் முன்னேற்றம் அரசுப் பள்ளிகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 12,000 அலுவலர்களுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை வெளியடப்பட்டன.
கணினி வழியாக போட் டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. 97 வட்டாரக் கல்வி அலுவலர் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியி டங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம், புதிய ஆசிரியர் நியமனங்கள், கல்விச் சுற்றுலா திட்டம் முதலிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த தரமான பள்ளிக் கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிகிச்சை பெற்று செல்வோர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
- வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
செங்கோட்டை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இன்று அதிகாலை குண்டாறு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் செங்கோட்டை அருகே உள்ள வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென சென்று அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள சிகிச்சை பெற்று செல்வோர் வருகை பதிவேடுகளில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஆய்வுக்கு பின்னர் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததற்காக வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
- அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும்.
- பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது.
திருச்சி:
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
கடந்த மாதம் 7-ந் தேதி கோவை மேட்டுப் பாளையத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 109 சட்ட மன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்த, எடப்பாடி பழனிசாமி நேற்று 3 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகை தந்தார்.
விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த பிரசாரக் கூட்டங்களில் எழுச்சி உரை ஆற்றினார்.
பின்னர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தன்யார் ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிலவரம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரங்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் 2-வது நாளாக இன்று மாலை 4 மணிக்கு மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்ச நல்லூர் கடை வீதியிலும், மாலை 5.30 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் அருகாமையிலும், இரவு 7 மணிக்கு முசிறி கைகாட்டி பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான முன்னேற்பாடுகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மணப்பாறை பஸ் நிலையம் அரு காமையிலும், மாலை 5.30 மணிக்கு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோடு, இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உரையாற்றி தமது 3 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடி, தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வருகை தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.
சென்னை:
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி சமூக நீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நம் கடமை என கூறி இருந்தார்.
இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் சுதர்சன் ரெட்டி முடிவு செய்து இருந்தார்.
அதன்படி சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று மாலை 5 மணி அளவில் அக்கார்டு ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் செல்கிறார்கள். சுதர்சன் ரெட்டியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.
- சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
- எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.
எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை பாரபத்தியில் த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் திரண்ட தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், 'அங்கிள்' என்று கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல் அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். த.வெ.க. மாநாட்டில் விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் காணப்படுகிறது.
விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தி.மு.க.வினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதியுடன் விஜய் குடும்பம் நல்ல உறவுமுறையில் இருந்தவர்கள்தான்.
* 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது.
* த.வெ.க. தொண்டர்கள் மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டாரா?
* கட்சி ஆரம்பித்த காரணத்திற்காகவே வசைபாடுவது ஏற்கத்தக்கதா என விஜய் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
- இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.
இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.
இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.
கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.
தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
- தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன். 26 வயதான இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியில் வசித்து வந்த ஹாசிதா என்ற 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஹாசிதா மாற்றுத்திறனாளி ஆவார். சிறுவயது முதலே இடதுகால் ஊனமுற்ற நிலையில் இருந்து வந்தார். இதுபோன்ற சூழலில் தான் நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போல பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு செல்போனில் பேசி உனது கேரக்டர் சரியில்லை. நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறிய ஹர்சிதா நான் தர்ஷனுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில்,
முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது - கழக துணைப் பொதுச்செயலாளரும் -கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும்.
அண்ணா விருது - தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு வழங்கப்படும்.
கலைஞர் விருது - நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் -அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரனுக்கு வழங்கப்படும்.
பாவேந்தர் விருது - கழக மூத்த முன்னோடியும் - தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும்.
பேராசிரியர் விருது - கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் - காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் - சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு வழங்கப்படும்.
மு.க.ஸ்டாலின் விருது - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
தருமபுரி:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.






