என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க எதிர்ப்பு- அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
- சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
- எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.
எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






