என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது.
- அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும்.
மயிலாப்பூர்:
சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கருத்தரங்கில் வன்னி அரசு பேசியதாவது:-
தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன்.
ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்கள்... இந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. இந்து மதத்தில் எப்போதுமே சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதத்திற்கு எதிராக மதம் மாறுகிறார்.
ராமன் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுக்காக இந்த படுகொலை செய்கிறார். ராமதாஸ் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுடைய இந்த கருத்தியலுக்காக படுகொலை செய்கிறார். படுகொலை செய்ய தூண்டுகிறார். இரண்டும் ஒன்று தான். ராமனும் ஒன்று தான்.. ராமதாசும் ஒன்றுதான். ராமதாசுடன் இதை நான் முடிக்கவில்லை.
இதன் தொடர்ச்சி இன்றைக்கு நிறைய இருப்பதால் இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
- விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
- புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழைய கல்குவாரியில் வயதான புலி சுற்றி வந்தது. மேலும் வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் சிங்காரா வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே பகுதியில் உள்ள புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இன்று புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
தேனாம்பேட்டை: எல்லியம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே ரோடு, கேஆர் ரோடு, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும் 2வது தெரு, மகாராஜா சாலை.
கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.
நன்மங்கலம்: அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோவில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சுவாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.
- திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார்.
- சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விஜய், "மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?
தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" என்று பேசினார்.
இந்நிலையில், மாநாட்டில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு பாஜக உறுப்பினர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சரத்குமார் கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழை வளர்த்துக் கொண்டிருப்பவர் மோடி; உலகின் மாபெரும் தலைவர் மோடி. 12 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட இறக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக
பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார். கத்துக்குட்டியான ஒருவர்.. கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்.ஜெயலலிதா என்று சொல்லியிருப்பீர்களா?
சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம். அந்த மாதிரி சிங்கமாக இருக்க கூடாது.
NEET ஏன் வேண்டாம்..? NEET-ஐ கொண்டுவந்தது யார்..? தகுதி இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும், தகுதி உள்ளவர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும்
கூட்டத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் கூட்டப்பட்டு, அதை தொலைக்காட்சியில் காட்டும் கூட்டம் அல்ல இது" என்று தெரிவித்தார்.
- விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
- பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
- மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
- அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி:
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியின் திட்டங்களால் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளனர். திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகளின் பிரச்சனைகளை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் நான். இன்றும் என்னுடைய தொழில் விவசாயம்தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்தோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி ரகுபதியை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன்.
திமுக அமைச்சர்கள், முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
கிட்னி விவகாரத்தில் எம்.எல்.ஏ. நக்கலாகப் பேசுகிறார். இப்படி நக்கலாக பேசவா ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? குடும்பக் கட்சியாக உள்ளது திமுக; மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக மட்டுமே என தெரிவித்தார்.
- மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
- அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
திருச்சி துறையூரில் அம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயலாகும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அதனை சுற்றுவளைத்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை விரட்டியடித்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
- மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ளது.
- ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு தமிழக அரசு வலியுறுத்தல்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020-ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது.
இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Ltd.) நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) ஓஎன்ஜிசி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.
எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்ட வட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த்.
- தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பங்கேற்றார்.
சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு எம்.பி. விஜய் வசந்த் சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கினார்.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நேற்று சென்னையில் ஊடகங்களின் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் கல்வித் திருவிழாவை சென்னை சேத்துப்பட்டு தனியார் பூங்கா வளாகத்தில் நடந்தியது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, தனது சொந்த நிதியிலிருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த், அவர்களை ஊக்குவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைககள், ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
விழாவில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நிகழ்த்தப்பட்டது. மேஜிக் ஷோவில் பள்ளி குழந்தைகளும், பெற்றோர்கள் சிலரும் பங்கேற்றனர்.
ஏர்டெல் சூப்பர் ஜூனியர் புகழ் ஹர்ஷினி தனது இனிமையான குரலில் பல திரைப்பட பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு எம்பி விஜய் வசந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.






