என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது.
- சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
சென்னை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று சுங்கத்துறை அறிவித்தது. அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள எந்த நகரங்களுக்கும் தமிழகத்தில் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள 2000 தபால் அலுவலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் பதிவு செய்வது வழக்கம். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 200 தபால் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் எல்லாம் இன்று முதல் அமெரிக்காவுக்கு மட்டும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இந்திய அரசு தெளிவான தகவல்களைப் பெற்று கூடுதலாக வரி விதிப்பு பற்றிய முழு விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மத்திய அரசிடம் இருந்து இது பற்றிய தகவல் வந்த பிறகுதான் பார்சல் சேவை தொடங்கும். அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்களை உறவினர்கள் அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ பார்சல் வரை அனுப்புவதற்கு அனுமதி உண்டு.
அமெரிக்காவிற்கு 20 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பார்சல் ஆகவும், ஸ்பீட் போஸ்ட் பார்சல் ஆகவும் ரெண்டு பிரிவாக பதிவு செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை...
- எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்...
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,
தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
- மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 2.45 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
- ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
மதுரை:
மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தநிலையில் விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று த.வெ.க.வினர் மீண்டும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் கதறல் சத்தம் கேக்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன் பிறப்புகளை தூங்க விடாது என்ற வாசகத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதிலும் பல மீட்டர் தூரத்திற்கு ஒரே போஸ்டர் ஒட்டினாலும் அது பேசும் பொருளாகி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது தி.மு.க.வினரும், த.வெ.க.வினரும் மாறி மாறி போஸ்டர் போரில் இறங்கியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.
அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.
- கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கி காட்டுமன்னார் கோவில் லால்பேட்டை வரையில் 14 கி.மீ. நீளம் கொண்டது வீராணம் ஏரி.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும், 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது.
வீராணம் ஏரி மூலம் டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் வட்டாரங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கிறது.
கோடையில் வரலாறு காணாத வகையில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 மாதத்திற்குள் 3 முறை முழு கொள்ளளவு நிரம்பியதால் சுற்றியுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கீழ் கொள்ளிடம் அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வடவாற்றில்1,527 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக வீராணம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவு நிரம்பியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வி.என்.எஸ். மதகு ஷட்டர்களை திறந்து வினாடிக்கு 5,683 கன அடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கும் பணியில் சேத்தியாதோப்பு வெள்ளாறு பாசன பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்றுமாலை 15 ஆயிரம் கனஅடி வந்தது.
இதையடுத்து இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.
- அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
சென்னை:
நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம் என்று கூறியுள்ளார்.
- அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
- தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் போது விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தேர்வு அறிவிப்பு (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் "Sports Quota" என தேர்வு செய்து சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
- போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






