என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் அ.தி.மு.க. கூட்டத்தில் நுழைந்த ஆம்புலன்ஸ்- விரட்டியடித்த தொண்டர்கள்
- எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அதனை சுற்றுவளைத்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை விரட்டியடித்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.






