என் மலர்
நீங்கள் தேடியது "Devote"
- இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.
இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.
இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.
கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.
தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடை பெற்றுவந்தது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ) புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 13-ந் தேதி இரவு நடை பெற்றது. தொடர்ந்து 17-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா(தங்க ரிஷப வாகன காட்சி), சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. முதல்தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சென்ப கத்தியாகராஜ சுவாமியும், 4-வது தேரில் நீலோத்பா லாம்பாளும், 5-வதுதேரில் சண்டிகேஸ்வரும் வரிசையாக கொண்டு செல்லப் பட்டது. காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ.சிவா, பா. ஜனதா மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
20-ந் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 21-ந் தேதி தெப்போற்சவமும் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் ஊழி யர்கள் செய்து வருகின்றனர்.
- காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மழை மற்றும் குளிர் அதிகமாக இருக்கும். அதேபோன்று தான் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சபரிமலையில் மழை மற்றும் பனி அதிகமாக இருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் சீதோஷ்ண நிலை வெவ்வேறாக இருக்கிறது. அதாவது பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலைக்கு பிறகு மூடு பனியும் நிலவுகிறது. இதன் காரணமாக பக்தர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏராளமான பக்தர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று 78 ஆயிரத்து 36 பேர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் 14 ஆயிரத்து 660 பேர் ஸ்பாட் புக்கிங் செய்து சபரிமலைக்கு வந்திருக்கின்றனர்.
இன்று பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 4,200 முதல் 4,300 பக்தர்கள் வரை மலையேறினர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்தார்கள்.
- மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம்(நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதனால், மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக நேற்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாட்கள் நடந்துவந்த மண்டல பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சீசன் காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சபரி மலைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.07லட்சம் பக்தர் கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.28 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளதாக தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது.
மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.






