என் மலர்
நீங்கள் தேடியது "Sabarimala"
- பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது.
- ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
- ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
இதற்காக சபரிமலை கோவில் நடை 4-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (5-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்குகிறது.
தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
- வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
- பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது சபரிமலை வரும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த கால கட்டங்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்படுகளை தேவசம்போர்டு தற்போதே செய்து வருகிறது.
ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்து விட்டு தாமதமாக பக்தர்கள் வந்தாலும் அவர்களது அறை பறிபோகாது. இதற்காக பம்பையில் சிறப்பு செக்-இன் கவுண்டர் திறக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
இதேபோல் ஆன்லைன் முன்பதிவில் பிரசாத முன்பதிவும் இடம் பெறும். ஆன்லைன் முன்பதிவு திரும்ப பெறப்பட்டாலும் பிரசாத முன்பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கும். ஒரு பிரசாதம் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த நபரின் வங்கி கணக்கில் நேரடியாக தொகை திரும்ப அளிக்கப்படும்.
பக்தர்கள் குடிநீர் தேவைக்காக 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களை நன்கொடையாளர்கள் மூலம் விநியோகிக்கவும் பம்பையில் உள்ள கவுண்டரில் ரூ.100 செலுத்தி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மலையில் இருந்து இறங்கிய பிறகு பக்தர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு வைப்புத் தொகையை திரும்ப பெறலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
- ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கு ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வன நிலம் ஒப்படைக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
பம்பை அடிவாரத்தில் இருக்கு சபரிமலை சன்னிதானத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக 2.7 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் வனம், வருவாய், தேவசம் துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் ரோப்வே திட்டம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் அந்த பணிகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது மற்றும் வனப்பகுதியில் கட்டுமான பணிகளை எளிதாக்குவது உள்ளிட்டவைகளை நோக்கமாக கொண்டு ரோப்வே பணிகளை மாற்றி புதிய அம்சங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரோப்வே-க்கான கோபுரங்கள் கட்டுமானத்தின் போது வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அவை சபரிமலை பாதைக்கு அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது. கோபுரங்களின் உயரம் 30 முதல் 40 மீட்டரில் இருந்து, 40முதல் 60 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் கோபுரங்களின எண்ணிக்கை 7-ல் இருந்து 5-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ரோப்வே திட்டத்துக்கு வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை 300-ல் இருந்து 80 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கு ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வன நிலம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிலத்துக்கு பதிலாக கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கட்டிலப்பாரா, செந்தூரனி வன விலங்கு சரணாலயத்தில் உள்ள வருவாய் நிலம் வனத்துறைக்கு மாற்றப்படுகிறது.
அதில் 9 ஹெக்டேர் வருவாய் நிலம், காடுகளை வளர்ப்பதற்காக வனத்துறைக்கு ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டு சபரிமலை சீசன் முடிவடைவதற்குள் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட தேவசம் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கு தகுந்தாற்போல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2027-ம் ஆண்டு சபரிமலை சீசனுக்குள் ரோப்-வே இயக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த பணி தொடங்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு 10 நிமிடங்களில் விரைவாக செல்லவும், கார் மற்றும் ஆம்புலன்சு வாகனத்தை கொண்டு செல்லவும்முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
- எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
கடந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தால் தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பியதாக கூறப்பட்டது. இதுபோன்ற நிலை வரும் சீசனில் ஏற்படாமல் இருக்க கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்கை எடுத்துள்ளன. இது தொடர்பாக கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியதாவது:-
சபரிமலை வரும் பக்தர்களுக்கு அதிகபட்ச வசதிகள் செய்து தரப்படும். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
ஆன்லைன் முன்பதிவு தவிர, ஆதார் அட்டையுடன் தினமும் வரும் 10 ஆயிரம் பேருக்கு கூடுதல் சேர்க்கை வழங்க 3 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யப்படும். நடைபயணமாக வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க 3 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோலி தொழிலாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க இந்த சீசனில் ப்ரீபெய்டு டோலி முறை அறிமுகப்படுத்தப்படும்.
எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் இந்த சீசனில் செய்யப்படுவதால், எந்த பக்தரும் கோவிலில் தரிசனம் செய்யாமல் மனமுடைந்து திரும்ப வேண்டியதில்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முறைப்படி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
அரவணை பிரசாதம் தட்டுப்பாட்டை தவிர்க்க 40 லட்சம் கண்டெய்னர்களில் இருப்பு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.
- திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும் குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தா்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ந்தேதி (16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் சிறிய இடைவெளியைத் தொடா்ந்து மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலையில் திரள்வா்.
கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தா்களுக்கும் நேரடியாக வரும் 10,000 பக்தா்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.
அந்த வகையில், ஏஐ மூலம் பக்தா்களுக்குத் துல்லிய தகவல்களை வழங்கும் சுவாமி ஏஐ சாட் பாட் செயலியை முத்தூட் குழுமத்தின் ஒத்துழைப்போடு பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சுவாமி ஏஐ சாட்பாட் செயலியை பக்தா்கள் தங்கள் அறிதிறன் பேசிகளில் நிறுவி, ஏஐ மூலம் உரையாடலில் தகவல்களைக் கேட்டு பெறலாம். பூஜை நேரங்கள், ரெயில் மற்றும் விமான நிலைய வசதிகள் பற்றிய விரிவான தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும்.
இந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மிகவும் வசதியான, துல்லியமான மற்றும் பாதுகாப்பான யாத்திரை அனுபவத்தை சாட்பாட் உறுதி செய்யும். இச்செயலி விரைவில் பக்தா்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்தது.
- அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களது வசதிக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு பயணிகளை ஏற்றி வர அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் சாலக்காயத்துக்கும், நிலக்கல்லுக்கும் இடையே உள்ள காட்டுப்பகுதியில் 30-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, பஸ்சில் இருந்து புகை வந்துள்ளது.
இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
- மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது.
அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நேரத்தில் வலிய நடை பந்தலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதன்பிறகு கூட்டம் குறைந்தது. நடைப்பந்தலில் பக்தர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்கு பிஸ்கட், சுக்கு தண்ணீர் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. பதினெட்டாம் படியிலும் பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்களை விரைவாக படியில் ஏற்றி விடப்படுகிறார்கள்.
அது மட்டுமின்றி தற்போது கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பக்தர்கள் இருமுடி கட்டுடன் படியேறாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடக்காவிட்டாலும், அன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அன்று முதல் நேற்று(18-ந்தேதி) மாலை வரையிலான 4 நாட்களில் 2.26லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.
- பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
- மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பதினெட்டாம் படியில் போலீசார் குரூப்-போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
அதிலும் பக்தர்கள் படியில் ஏறிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்களே தவிர, இறங்கி வர அனுமதி கிடையாது. பந்தள மன்னரின் பிரதிநிதிகள், கோவிலில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் மட்டுமே பதினெட்டாம் படியில் மேலே இருந்து கீழே இறங்க அனுமதி உள்ளது.
அவ்வாறு அவர்கள் இறங்கும் போது பின்நோக்கியே இறங்குவார்கள். சாமிக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பின்நோக்கி வரக்கூடிய மரபே சபரிமலையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு, அங்கு பக்தர்களை படியேற உதவக்கூடிய போலீசார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றியே பதினெட்டாம் படியில் நிற்பார்கள். இந்த நிலையில் பதினெட்டாம் படியில் பணியில் இருந்த போலீசார், அதில் நின்று குரூப்-போட்டோ எடுத்திருக்கின்றனர். அதிலும் தங்களின் பின்புறத்தை காண்பித்து நின்று கொண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. சபரிமலையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும் சபரிமலையின் ஆச்சார விதிகளை மீறிய போலீசாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து பதினெட்டாம் படியில் போலீசார் குரூப்-போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சபரிமலை மரபுகளை மீறும் வகையில் போலீசார் செயல்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதான போலீஸ் சூப்பிரண்டு பைஜூவுக்கு கேரள மாநில ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பைஜூ விசாரணையை தொடங்கினார். பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். அது போன்று தான் கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடிந்து புறப்படும் போது, மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.
பதினெட்டாம் படியில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு பொறுப்பாக பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட 30 போலீசாரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மழை மற்றும் குளிர் அதிகமாக இருக்கும். அதேபோன்று தான் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சபரிமலையில் மழை மற்றும் பனி அதிகமாக இருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் சீதோஷ்ண நிலை வெவ்வேறாக இருக்கிறது. அதாவது பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலைக்கு பிறகு மூடு பனியும் நிலவுகிறது. இதன் காரணமாக பக்தர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏராளமான பக்தர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று 78 ஆயிரத்து 36 பேர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் 14 ஆயிரத்து 660 பேர் ஸ்பாட் புக்கிங் செய்து சபரிமலைக்கு வந்திருக்கின்றனர்.
இன்று பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 4,200 முதல் 4,300 பக்தர்கள் வரை மலையேறினர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்தார்கள்.
- கோவில் நடை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
- தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை யாத்திரை காலம் கடந்த (நவம்பா்) மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
41 நாட்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம், சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, பக்தா்களுக்கு சுமூக தரிசனத்தை உறுதி செய்வது குறித்து மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
பக்தா்கள் வெளியேறும் வாயில்களை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், சிறப்பாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை கருத்தில் கொண்டு, உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நடை பந்தலில் பக்தா்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இல்லாமல் சுமூகமாக செல்வது உறுதி செய்யப்படும்.
பக்தா்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் போ் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல பூஜையைத் தொடா்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை வருகிற 30-ந்தேதி திறக்கப்படும்.






