என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாஸ்கரன் நீக்கம்.
    • உடன்பிறப்புகள் யாரும் பாஸ்கருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பாஸ்கரன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
    • ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அவனியாபுரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தாங்களே எடுத்து நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் அவர்கள் அமைச்சரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மதுரைக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையிலே 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வருகை தர உள்ளனர். எப்போதும் போல் 3 ஜல்லிக்கட்டிலும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எந்தவித பாகுபாடும் இன்றி இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்றார்.

    • திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
    • தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நிர்வாகிகள் கட்ச தாவி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று, திமுக மற்றும் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர்.

    அதன்படி, தஞ்சை மத்திய மாவட்டம் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று தவெகவில் இணைகிறார்.

    விஜய் தலைமையில் நடக்கும் விழாவில் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.

    புதுவை முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, காங்கிரஸ், தேமுதிக நிர்வாகிகளும் தவெகவில் இணைகின்றனர்.

    நாதகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.

    மேலும், சென்னை மாநகராட்ச 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
    • ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

    தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது என ஐபிடிஎஸ் தகவலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    யாருக்கு வாக்கு?" – IPDS தரவு சொல்லும் தகவல்.

    தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.

    ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

    இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

    ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

    அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • கனிமொழி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • 2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்துள்ளார்.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் அதிகரித்தது.

    நேற்று முன்தினம் காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,600-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,600க்கு விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

    1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    3-1-2026- ஒரு கிராம் ரூ.257

    2-1-2026- ஒரு கிராம் ரூ.260

    1-1-2026- ஒரு கிராம் ரூ.256

    31-12-2025- ஒரு கிராம் ரூ.257

    • மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?
    • நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில் , விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.

    அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களும், சிறிய காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர்களின் வழிகாட்டுதலில் அதற்கான துணை மருத்துவப் பணியாளர்களும் தான் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதை மீறி மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?

    நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதை விட கொடுமையானது இது தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பதில் தான். மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாகவும், அவர் சிறப்பாக சிகிச்சை அளித்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது.
    • இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.

    தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி நேற்று வரை சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

    புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர்.

    வீடுகளை மாற்றிக் கொண்டு இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்காக படிவம் எண் 6ஐ அளித்தனர். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 286, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 592 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதியிலிருந்து கடந்த 3-ந்தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6 ஏ அளித்தனர். இதேபோல இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

    • வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.
    • கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பத்திரப்பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கப்படும் வன்பொருள் ஒன்றில் (ஹார்டுவேர்) தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.

    இதனை கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இந்த வன்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு துறையின் மென்பொருள் முறையாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.

    முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    • அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித்ஷா ஆலோசனை.
    • கூட்டத்தில் திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

    பின்னர், அங்கு திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.

    விழாவிற்கு பிறகு, திருச்சியில் தங்கியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

    சட்டமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாக அமித் ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல்

    மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?
    • அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.

    சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படாமல் இருக்கிறார். பொது மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்திருப்பார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் உடனடியாக டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?

    திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி, அதிமுக தான் உண்மையான கட்சி. வரும் தேர்தலுடன் திராவிட முன்னேற்றக் கழக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுகவிற்காக உதயநிதி ஸ்டாலின் எத்தனை காலம் உழைத்திருக்கிறார்?

    திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூப்பாடு போடுகிறார். கார் பந்தயம் நடத்த, கடலில் பேனா சிலை வைக்க தேவையில்லாமல் நிதி செலவழிப்பு.

    கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி 100 நாள் வேலை நாட்களை உயர்த்தினார்களா?

    அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.

    அதிமுக எப்படி கூட்டணி அமைக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×