என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
- உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆதங்கம்.
நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னிலையில் அனைவரும் த.வெ.க.-வில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று கட்சியில் இணைந்த பிரபலங்கள் வருமாறு:-
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியன், ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி.ராமச்சந்திரன், நடிகை ரஞ்சனா நாச்சியார், டைரக்டர் ஜெகதீச பாண்டியன், புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் பாஸ்கரன், வேலா ராமமூர்த்தி மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க.வை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்கள்.
இணைந்தவர்களில் சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் 23-வது வார்டு கவுன்சிலர் ராஜனும் ஒருவர். இவர் காங்கிரசில் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரையும் காங்கிரஸ் கணக்கிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் இன்று ராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
த.வெ.க.வில் இணைந்தது குறித்து கவுன்சிலர் ராஜன் கூறும் போது," தமிழகத்தில் விஜய்யால் மட்டுமே மாற்று அரசியலை கொண்டு வர முடியும். எனவேதான் த.வெ.க.வில் இணைந்து உள்ளேன்" என்றார்.
இதேபோல் த.வெ.க.வில் இணைந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கி தட்டி கேட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
அவரும் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மாக இன்று இணைந்தார்.
த.வெ.க.வில் இணைந்தது பற்றி நடிகை ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது:-
நான் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர் சேதுபதி மகன் பாண்டி மகாராஜாவின் மூத்த பேத்தி. எங்களது மூதாதையரான வீரவேலு நாச்சியாரை த.வெ.க. கொள்கை தலைவராக அறிவித்த அன்றே த.வெ.க.-வுடன் மனப்பூர்வமாக பயணிக்க தொடங்கி விட்டேன்.
தமிழகத்தின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்றதும் பெண்களுக்கு முன்னுரிமை அல்ல சம உரிமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர்.
- மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
திருச்சி:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டன.
அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்துள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை திருச்சி வருகை தந்தார். புதுக்கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தி.மு.க. அரசை கடுமையாக சாடிய துடன், அதனை வரும் தேர்தலில் அகற்றவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
பின்னர் இரவு திருச்சி வந்த அமித்ஷா, கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். முன்னதாக பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் அவர் விவாதித்தார்.
இரவு அதே ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த மத்திய மந்திரி அமித்ஷா இன்று, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதையடுத்து காலை 9.15 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்ட அவர் டி.வி.எஸ். டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பஞ்சக்கரை வழியாக முதலில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக திகழும் திருவானைக்காவல் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார். பழமையான கோவில் பிரகாரங்களை வலம் வந்த அவருக்கு கோவில் புராண வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அமித்ஷா, பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். தற்போது அங்க வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வரும் நிலையில் அமித்ஷாவுக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
கோவிலுக்குள் சென்ற அவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வழிபட்டார். தொடர்ந்து மூலவரை மனமுருகி தரிசித்த பின்னர் தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு நினைவுப்பரிசு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா திருச்சி மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம் வழியாக மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி ஏர் கலைப்பையை தோளில் சுமந்தவாறு கூடிய சிறிய கட்அவுட்டுடன் பிரமாண்ட மேடை, சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மைதானத்தில் பொங்கல் வைப்பதற்றாக 2 ஆயிரம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், 1,008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை முதலே விழா நடைபெற்ற மைதானத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர். அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணிக்கு தான் செல்ல இருக்கிறோம் என்றார் தினகரன்.
- 2026 தேர்தலில் அமமுக கைகட்டுபவர் தான் முதலமைச்சர் என்பது இயற்கை எழுதியுள்ள தீர்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தி் நடைபெற்று வரும் அமமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினா்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறி இருந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் தினகரன் பேசியுள்ளார். இதனால், விஜய் கட்சியில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நமககு எம்.பி, எம்எல்ஏ எண்ணிக்கை முக்கியமல்ல லட்சியமே முக்கியம். அமமுக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தினகரனின் கூாரம் காலியகிவிட்டது என நம்மை விமர்சித்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர்.
தெளிந்த நீரோடை போல செயல்பட்டு கொண்டிருக்கும் அமமுக-வால்தான் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. யாரிடமும் எதற்காகவும் சமரசம் செய்யாத இரும்புப் பெண்மணியின் பெயரில் அமமுக இயங்கிக் கொண்டிருக்கிறது.
2026 தேர்தலில் அமமுக கைகட்டுபவர் தான் முதலமைச்சர் என்பது இயற்கை எழுதியுள்ள தீர்ப்பு. தமிழநாட்டில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக அங்கம் வகிக்கும்.
உங்களன் மன ஓட்டம் என்ன என்பதை அறிந்து நிச்சயம் வெற்றிக் கூட்டணியில் இணைவோம். மதம், சாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளா்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனிமொழிக்கு த.வெ.க. தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க.-விற்கும் தி.மு.க.-விற்கும் தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு, விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி.
- கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.
- செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு மாலை 4 மணி அளவில் நடைபெறும்.
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 29-ந் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி- கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.ராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
- ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 4 லட்சம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உழவர்களை ஏமாற்றுவதையே தி.மு.க. அரசு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. உழவர் பெருமக்கள் உழவர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன.
- கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் பயங்கர கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. சில நேரங்களில் எழுந்து வந்து ராட்சத அலைகள் கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
கரையை நோக்கி வந்த ராட்சத அலைகளை கண்டு கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அவ்வப்போது நிகழ்ந்த கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். சில நேரங்களில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.
இந்த கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு "திடீர்"என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு துறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகிய வற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
- த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.
- மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியல் தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள். தொலைந்தார்கள்.
அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வரும் என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே நெஞ்சில் இன்று உதயமாகி உள்ளது.
விஜயின் அதிர்வுகள் இன்றைக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைக்கு த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கே அந்த ஆசை உள்ளது.
நான் ரெயிலில் பயணித்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். நான் அவரிடம் என்ன த.வெ.க.வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அவர் சொன்னார். எங்களுக்கு த.வெ.க. மீது தான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது தி.மு.க.வை என்று வருத்தத்துடன் சொன்னார்.
எல்லா கட்சிகளும் த.வெ.க. எனும் நந்தவனத்திற்கு வருவதற்கு நாள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய். திருவண்ணாமலையில் 1,35,000 இளைஞர்களின் நிர்வாகிகளின் வடக்கு மண்டல மாநாடு நடத்துகின்ற அன்று, அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையனை த.வெ.க.வில் இணைத்ததன் மூலம் தி.மு.க. இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
டிச.5-ந்தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் நடத்துவதாக அறிவித்தார்கள்.
அன்றைக்கு தான் த.வெ.க. தலைவர் என்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அன்றைக்கு நான் இணைந்து செய்தியானதே தவிர அந்த பேரணி செய்தியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை.
ஆகவே, எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாவகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் எங்கள் த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
- வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, வரும் 8ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.
இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி,
கவிதை - கவிஞர் நா. சுகுமாரன்
சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
நாவல் -எழுத்தாளர் ரா.முருகன்
உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி)
நாடகம் - கே.எஸ். கருணா பிரசாத்
மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.
- வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?
- தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து திமுக அரசு வகுத்து வருவதை பார்த்து பொறாமையில் குமைகிறார் எடப்பாடி பழனிசாமி.
'நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல' என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்! சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
''திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி'' எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.
2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி 'வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும்.
''2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை'' என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றது பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டை விழுந்ததை எல்லாம் மறந்துவிட்டாரா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு 'கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு' எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் 68 கோடி ரூபாயில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை CAG என்ற இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய CAG அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2017-2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12-ஆம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 லேப்டாப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் லேப்டாப்புகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்புகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம்' எனச் சொல்கிறார் பழனிசாமி. வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?
CAG அறிக்கையில் 53-ஆம் பக்கத்தில் மடிக்கணினிகளின் தேவை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 -2018 முதல் 2020 – 2021 வரை 11 மற்றும் 12-ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், 20 சதவிகித மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள். 2017-2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்புகளை பெறவில்லை.
55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.
மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் மாண்புமிகு முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி.
டீ கடையில் காசு இல்லாமல், ''டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி'' என வடிவேலு பேசும் காமெடிதான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படிதான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. மகளிர் உரிமத் தொகை, லேப்டாப், போன்றவற்றை அதிமுக குரல் கொடுத்ததால்தான் திமுக அரசு கொண்டு வந்தது என பழனிசாமி சொல்லிக் கொள்ளும் வரிசையில் இப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் பழனிசாமி தலையை நுழைத்திருக்கிறார். அடுத்து நாம் ஓர் திட்டம் கொண்டு வர முடிவு செய்தாலே, உடனே முந்திக் கொண்டு அதற்கு ஒரு கருத்தைச் சொல்லி, அது தன்னால்தான் வந்தது எனப் பெருமைப்பட்டு அரசியல் செய்வது எல்லாம் எதிர்க கட்சித் தலைவர் செய்யும் செயலா?
"எல்லாமே என்னால்தான் நடந்தது" என்று ஒரு Mindsetஃபோபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். "நான்தான் எல்லாம் செய்பவன்'' என்ற "God Complex" அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நம்முடைய திட்டங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆதரவை எதிர்க் கட்சித் தலைவரே உணர்ந்ததால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். பழனிசாமி அரசியல் செய்வதற்கும் நம்முடைய சாதனை திட்டங்கள் காரணமாக அமைந்திருக்கிறது. Election Eyewash-க்காக லேப்டாப் கொடுகிறார் என சொல்கிறார் பழனிசாமி. அவருடைய God Complex-ஐ என்ன சொல்ல?
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ''ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்'' என்றார். 'கூட்டணி ஆட்சி' என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை.
''கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான்'' என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார். . 'கூட்டணிக்கு தலைமை' என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமிதான் 'முதல்வர் பதவி'க்கு வரப் போகிறாரா? ''இந்த அவமானம் உனக்கு தேவையா?'' என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமிதான்! அவமானங்களை தாங்கி கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்றுதான் போல!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விசாரித்தனர். இதில் மலை உச்சியில் உள்ள தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், கோவில் தரப்பு என பல்வேறு தரப்பினரும் தங்களது தரப்பு கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். முடிவில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்க மூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் சொல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும். அதன் பின்பு உரிய முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
இதன் மூலம் நாளை நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறும் கந்தூரி விழா நடத்த கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






