என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதல் இடம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருப்பதால் உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நாய் இனங்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வளர்த்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக, சென்னையில் உள்ள மக்கள் அதிக விலை கொடுத்தும் இதுபோன்ற வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே, பொதுமக்களை வளர்ப்பு நாய்கள் கடிப்பது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு உரிமம் பெறப்பட்டவைகளில் எந்த வகையான நாய் இனங்களை பொதுமக்கள் அதிகம் வாங்கி வளர்க்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லாப்ரடோர் ரெட்ரீவர்' என்ற வகையான நாய் இனம் முதல் இடத்தில் உள்ளது. இவை கனடாவை பூர்வீகமாக கொண்டது. அந்நாட்டு மீனவர்கள் இவ்வகை நாய்களை தங்களுக்கு உதவியாக வளர்த்து வந்தனர். இதனுடைய புத்திசாலி தனம், விசுவாசம், விளையாட்டுத் தன்மையால் பல்வேறு நாட்டவர்களும் விரும்பி வாங்கி வளர்த்து வருகிறார்கள்.

    இதற்கு அடுத்தபடியாக, திபெத்தை பூர்வீகமாக கொண்ட 'ஷிஷ் சூ' என்ற வகை நாய் இனம் உள்ளது. இதனுடைய நீண்ட முடி பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். அமைதியான குணம் என்பதால் இதை விரும்பி வாங்குகிறார்கள். அனைவராலும் அறியப்படும் 'பொமேரியன்' வகை நாய்கள் 3-வது இடத்திலும், ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்ட 'கோல்டன் ரெட்ரீவர்' 4-வது இடத்திலும் உள்ளது.

    'ஜெர்மன் ஷெப்பர்டு' 5-வது இடத்திலும், பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட 'பீகில்' வகை நாய் 6-வது இடத்திலும், சீனாவை பூர்வீகமாக கொண்ட 'பக்' வகை நாய் இனம் 7-வது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 'இந்தியன் ஸ்பிட்ஸ்' 8-வது இடத்திலும், சைபீரியாவை சேர்ந்ததாக கருதப்படும் 'ஸ்பிட்ஸ்' வகை நாய்கள் 9-வது இடத்திலும், திபெத்தை சேர்ந்த 'லாசா ஆப்சோ' 10-வது இடத்திலும் இருக்கிறது. இதேபோல, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 'சிப்பிப்பாறை' 11-வது இடத்தில் இருக்கிறது. தேனியின் 'கோம்பை' 15-வது இடத்திலும், ராஜபாளையம் நாய் 18-வது இடத்திலும் உள்ளது.

    • வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனை பெற்றுக்கொள்ள வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எம்கேபி நகர்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலயன்புரி தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஏரியா, 100 அடி சாலையின் ஒரு பகுதி, அண்ணா நகர், Csir சாலை, காந்தி நகர்.

    • மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
    • காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.

    சென்னை:

    மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

    முதலில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.

    இந்த சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.

    இதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுபான விற்பனை கடையில் ஒப்படைக்கும்போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.

    தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.

    இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை இன்று (அதாவது நேற்று) அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.

    இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

    எனவே சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது கூடாது, கந்தூரி விழா நடத்தக்கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்
    • நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டனர்

    இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ""ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, 'எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி' என்றார்.

    அதன் பிறகு என்ஜினியரிங்கும் மாஸ்டர்ஸ்-உம் படித்தேன். கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உதவுகிறது.

    விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே உதவும். நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அங்கு பெரிய பொறுப்பில் இருந்தார்கள்.

    நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். ஏஐ வளர்ச்சி அடையும் கட்டத்தில் அரசு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம்.

    இதை செய்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் தொழில் முனைவோர் பலர், இந்தியாவில் இது வளர்ச்சியை தரும் என கூறுகின்றனர்" என்றார்" என தெரிவித்தார்.  

    • என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
    • அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ''வருங்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்று நிலை வரக்கூடும். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைக்க வேண்டும்.

    ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும்.

    சிறு மடிக்கணினி தனிப்பட்ட முறையில் என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.

    பணி ஓய்வுக்கு பின் பல அறிவியல் சார்ந்த துறை நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசு வருகிறேன். கட்டுரைகள் எழுது வருகிறார். இவற்றுக்கு மடிக்கணினி எனக்கு உற்ற தோழனாக உள்ளது

    ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, அவை மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி ஆகும்.

    சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

    டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை. மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும்' என்று தெரிவித்தார்.  

    • பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
    • தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

    பெட்டிகளை இணைப்பதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரெயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

    தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கத்திற்கு நிகராக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.640 உயர்ந்துள்ளது. இதனால், இன்று ஒரோ நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்துள்ளது.

    அதன்படி, தற்போது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080க்கு விற்பனை ஆகிறது.

    இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.266க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.2.66 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

    வெள்ளியின் விலை காலையில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1000 உயர்ந்து ரூ.2.66 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை: இன்றைய நிலவரம்

    ஒரு கிராம் (22 காரட்)- 12,760 (+160)

    ஒரு சவரன் (22 காரட்)- ரூ.1,02,080 (+1280)

    வெள்ளி விலை: இன்றைய நிலவரம்

    ஒரு கிராம்- ரூ.266 (+9)

    ஒரு கிலோ- ரூ.2.66 லட்சம் (+9000)

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

    1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    3-1-2026- ஒரு கிராம் ரூ.257

    2-1-2026- ஒரு கிராம் ரூ.260

    1-1-2026- ஒரு கிராம் ரூ.256

    31-12-2025- ஒரு கிராம் ரூ.257

    • ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.
    • ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நிச்சியமாக வரும் 2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்று பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றிப்பெறும்.அனைவருக்கும் இந்த முறை அமைச்சரவையில் அங்கம் வகிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது ஆட்சியில் பங்கு என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு சாத்தியமும் நிறைய இருக்கிறது.

    கூட்டணியக்கு யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணிகள் அமையும்போது மக்களுக்கு தெளிவாக புரியும்.

    யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்குதான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாறு உண்டு. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சிகள், காட்சிகள் மாறுகிறது. ஆனால் அதிமுக மட்டும்தான் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தது.

    அதனால், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.

    "தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நடப்பாண்டு நீலகிரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிமாக உள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது.

    ஊட்டி நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை எட்டியது. தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவியது.

    இதன் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று உறைபனி படிந்து காணப்பட்டது. உறைபனி பொழிவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதற்கிடையே மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் மற்றும் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கம் காணப்படுகிறது. தேயிலை செடிகளின் இளம் தண்டுப்பகுதி, இளம் இலைகளை இந்த நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 2020-க்கு முன்பு பனிப்பொழிவால் 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பில் தேயிலை செடிகள் கருகின. 2021-22-ல் பனிப்பொழிவு குறைந்ததால் 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.

    கடந்த 3 ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலை செடிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக நிழல் தரும் சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். கொப்புள நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றினால், தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கலாம் என்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது
    • சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனையாகாத பூக்களை ஆங்காங்கே கொட்டி வரும் அவலம் நடந்து வருகிறது.

    இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த தினம் , கோவில் நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது.

    இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.

    இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம் என்றனர்.

    ×