என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
    • இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.

    வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்வில்லை என்றால் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காவிடில் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

    இடஒதுக்கீடு வழங்காவிடல் 2 மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம். பாமகவினர் அறவழியில் கலந்து கொள்ள வேண்டும்.

    பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

    இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
    • கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
    • தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

    இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

    இந்நிலையில், திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் தவெகவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

    இதைதொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு துணை ஆணையர், பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்தார்.

    விஜய், வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
    • வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்.

    கோவை அரசு மருத்துவமனையில் வெகு நேரமாகியும் நோயுற்ற ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்காததால், அவரது மகன் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

    மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
    • திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    குறிப்பாக, சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

    சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், பாரிமுனையில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மேக மூட்டமாக காணப்படுகிறது.

    சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
    • ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.

    ரிதன்யா தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரிதன்யாவின் பிறந்த நாளான இன்று, அவரது தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது, குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ரிதன்யா பெயரில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட உள்ளதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளானர்.

    இதுகுறித்து ரிதன்யாவின் பெற்றோர் கூறுகையில்," ரிதன்யா பெயரில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, ரிதன்யா சமூகசேவை அறக்கட்டளை மூலம் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும்" என்று குறிப்பிட்டனர்.

    • பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும்.
    • பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.

    தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல — மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.

    இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாசிச பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

    மக்களின் ஆதரவு கொண்ட மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.

    இந்தப் பாசிசக் செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி.

    ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜகவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.

    மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் — நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திவிரமாக தயாராகி வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் பலமே இளைஞர்கள்தான் என்பதால் தேர்தலில் அவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

    இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று 130 பேரை தேர்தலில் களமிறக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.

    தங்களது பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி இளைஞர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து இளம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 130 பேரில் 65 பேர் இளம் பெண்களாக இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற தேர்தலில் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 134 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வரு கிறார்கள். அந்த மாநாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் சீமான் வெளியிட உள்ளார்.

    மாநாட்டு மேடையில் இருந்தே தனது தேர்தல் பிரசாரத்தையும் சீமான் தொடங்குகிறார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சீமான் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை சட்டமன்ற தேர்தலில் காட்டி கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    • ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
    • மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.

    ஈரோடு:

    குறைந்த கட்டணத்தில் நீண்ட தொலைவுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் அம்ரீத் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரெயில்வே வாரியத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலம் ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    இதற்கான உத்தரவு கடந்த 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை தோறும் ஈரோட்டில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜோக்பானியில் இருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஈரோடு- ஜோக்பானி இடையில் இயக்கப்படும் ரெயில் எண் (16601) வியாழக்கிழமைதோறும் ஈரோட்டில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை, கூடூர், விஜயவாடா, கம்மம், வாரங்கல் சென்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் ஜோக்பானி- ஈரோடு இடையிலான ரெயில் எண் (16602) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:15 மணிக்கு ஜோக்பானியில் இருந்து கிளம்பி புதன்கிழமை காலை 7:30 மணி அளவில் ஈரோடு வந்தடையும்.

    இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கை மற்றும் லக்கேஜ் கொண்டு செல்லும் வசதியுடன் 8 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கையுடன் கூடிய 11 பெட்டிகள் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.

    மொத்தம் 3300 கி.மீ. பயணிக்கும் இந்த ரெயில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.
    • முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத்தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இது தான் பதில்.

    ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.

    தமிழகத்தில் இதுபோல எத்தனை ஆண்டுகள் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.

    வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இதற்கு நீதிபதிகள் துணையாக இருக்க வேண்டும்.

    ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வரும் தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையில் குதித்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45), பேத்தி தீபிகா (20) என தெரியவந்தது.

    மேலும் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    • வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா.
    • வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்" என்றார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    "ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா!

    இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×