என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என மாவட்ட செயலாளரை வீட்டிற்கே சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மாவட்ட தவெக இணை செயலாளர் இளங்கோ சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகியுள்ளது.

    • கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார்.

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    இவ்விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    • “என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா!
    • “தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!" என்றார் பேரறிஞர் அண்ணா!

    புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், "தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!

    #ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
    • நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.

    • பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
    • தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.

    தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது.
    • பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் அழகிய வெண்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது. பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.

    விஷ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், மாநில செயலாளர் பாலமணிமாறன், மாநில துணைத்தலைவர் பத்ரி நாராயணன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ்குமார் சோப்ரா, வி.எச்.பி பொருளாளர் தணிகைவேல், தாமோதரன், பிரச்சார அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிவசபா ஆசிரமம் நிர்வாகி அன்னை ஞானேஸ்வரி கிரி.

    திரைப்பட நடிகர் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் வி.ஜெ.ஜெகதீசன், மாநில அமைப்பாளர் ஆத்தூர் வெ.பாலாஜி, அமைப்பு செயலாளர் எஸ்.வி.ராமன், திரைப்பட நடிகர் எஸ்.ராஜா, வி.எச்.பி அறங்காவலர் ஜி.மணிகண்டன், திருச்சி சாரதாஸ் எம்.ரோஷன், திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    இந்த 21 அழகிய திருக்குடைகள் பொதுமக்கள் பக்தர்கள் வழிபாடுகளுடன் ஊர்வலமாக சென்று 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலிலும் மாலை 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுவதாக திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
    • பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    20 மற்றும் 21-ந்தேதிகளில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    22-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 20-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும்.
    • அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் என்ற பெயரில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து பேசுவது நல்ல விஷயம் தான். எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும். அ.தி.மு.க.வை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பா.ஜ.க. தான் என்பதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்தார். டி.டி.வி. தினகரன் எதற்காக பா.ஜ.க.வையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் என்னை நண்பர் என்று சொன்னார். 30 ஆண்டு காலம் எனக்கு டி.டி.வி. தினகரன் நண்பர். அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,பா.ஜ.க. என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்சனையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம். பா.ம.க., அ.தி.மு.க. கட்சிகளில் பிரச்சனைகள் உள்ளன. புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சனைக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.

    • கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
    • சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
    • மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.

    12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.

    இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.

    மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.



    • ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
    • விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது.

    மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.

    இது குறித்து முன்பு ஒரு முறை சத்குரு கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

    அந்த வகையில் இதுகுறித்து, ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞரிடம் பேசினோம்.

    அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருடமும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறோம். இந்த வருடம் நாங்கள் இரண்டு அணிகள் மூலம் பங்கேற்றோம்.

    ஆனால், ஒரு அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. மற்றொரு அணி கிளஸ்டர் அளவில் வெற்றி பெற்று, தஞ்சாவூரில் நடந்த டிவிஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தஞ்சாவூரில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

    எங்கள் அணியில் விளையாடிய இருவர் காவல்துறையில் வேலை பெற்றுள்ளார்கள். இதனால், விளையாட்டில் ஈடுபடுவது அரசு வேலைவாய்ப்புக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களுக்கு விளையாடச் சென்றாலும், எங்கள் அணியில் வேறு அணியைச் சேர்ந்த வீரர்களைச் சேர்த்து விளையாடுவதில்லை.

    ஈஷா கிராமோத்சவப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது விதிமுறையாக உள்ளது. இது கிராம இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது, இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    விளையாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனால், மது, பாக்கு, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் அணியில் மூன்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

    நாங்கள் மூவரும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து, புதிய வீரர்களை உருவாக்கி வருகிறோம். முன்பு எங்கள் ஊரில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அருகிலுள்ள ஊருக்கு சென்று விளையாடி வந்தோம்.

    எல்லா இளைஞர்களும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்கள் ஊர்மக்கள் இணைந்து எங்களுக்கு மைதானம் அமைத்துத் தந்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்கு வசதியும் செய்து தந்துள்ளனர்.

    இதனால், இரவு நேரத்திலும் விளையாட முடிகிறது. அவ்வப்போது போட்டிகளையும் நடத்தி வருகிறோம். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால், வீரர்கள் மட்டுமல்லாமல், ஊரே ஒற்றுமையாக உள்ளது.

    வெளியிடங்களில் விளையாடச் சென்றால், நுழைவுக் கட்டணமாக ஐநூறு முதல் ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஆனால், ஈஷா கிராமோத்சவப் போட்டிகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. இலவசமாக விளையாட வைக்கிறார்கள். மேலும், வீரர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்கிறார்கள்.

    இவையெல்லாம் ஈஷாவின் மீது எங்களுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×