என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது.
    • நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் விஜயதாரணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக அனைத்து மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டு கட்டப்பட்டது, எய்ம்ஸ் கட்டப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களில் நாட்டின் உள்கட்டமைப்புகளை பன்மடங்காக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

    அந்த வகையில் ஜி.எஸ்.டி. வரி என்பது மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டாலும் தேசிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களுக்கு அதன் பயன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒரு காலகட்டத்திற்கு பின்பு அதற்கான பார்வைகள் இன்று குறைத்துள்ளனர். இதனால் பெரிய பலன் மக்களை சென்றடைந்து இருக்கிறது.

    வரி குறைப்பு மூலம் பெரும்பாலான உணவுப் பொருட்கள் பூஜ்ஜியம் ஜி.எஸ்.டி. வரி என்று ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது உணவு பொருட்களுக்கு வரி இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.

    வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை யாரும் தவறாக பேசக் கூடாது. நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரியே இல்லாத பூஜ்ஜியம் என்ற நிலையை மோடி தலைமையிலான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தது வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. தலைவர் எதிரில் இருக்கும் அணி பிரிந்து இருக்கிறதா? சேர்ந்து இருக்கிறதா என்பதை அடிப்படையாக கொண்டு வெற்றி பெறலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களது ஆட்சியில் ஏதாவது நல்லது செய்திருக்கிறோமா? என்பதை சொல்லி வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி முகத்தை துடைத்து கொண்டு வந்ததை முகத்தை மூடிக் கொண்டு வந்ததாக தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

    அமித்ஷாவை சந்தித்து சால்வையை அணிவிக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. பிறகு ஏன் எடப்பாடி முகத்தை மூட வேண்டும்.

    திமு.க. கூட்டணியில் தினமும் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. மேலும் சில கட்சிகளும் இந்த கூட்டணியில் வந்து சேரும்.

    வருகிற டிசம்பர் மாதத்துக்குள் மிக வலிமையான கூட்டணியாக எழக்கூடிய 100 சதவீத சாத்திய கூறுகள் உள்ளன.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய பலத்தோடு சந்தித்து வெற்றி பெறுவார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள். நான் பா.ஜ.க.வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அவர்களது கட்சியில் நாங்கள் எதுவும் தலையிட முடியாது என்றார்.

    • செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
    • செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.

    சென்னை:

    பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.

    * செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.

    * மண் குதிரையை நம்பி முதலமைச்சர் காவிரி நோக்கி பயணிக்கிறார்.

    * 2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையில் காவிரிக் கரை நோக்கி முதலமைச்சர் செல்கிறார்.

    * சாராயம் விற்ற பணத்தில் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது என்றார். 

    • அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது.
    • நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது!

    காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது.

    அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 



    • தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
    • விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான்

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாள் எடுக்கும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என்று சொன்னால் உங்களை யார் வர சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக்கூடாது.

    தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    கோவை:

    முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.

    தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.

    தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.



    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.

    பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.

    2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.

    இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.
    • புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் அசோக்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த அசோக்குமார் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அசோக்குமார் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.

    இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

    சம்பவம் நடந்தபோது அசோக்குமாரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

    இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.

    ஆலய நுழைவு போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றம் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திருக்கிறது.

    மதுரை ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்று 86 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

    எனவே, தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில் வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.
    • தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்கிறார்கள்.

    * விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.

    * தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுகிறார்கள்.

    * தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    ஓமலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க. உள் விவகாரத்தில் தலையிட மாட்டேம் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    * அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை.

    * என்னுடைய எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

    * கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அ.தி.மு.க.வில் வழக்கம்.

    * முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    * ஜெயலலிதா இருக்கும் வரை சென்னைக்கு வராதவர் டி.டி.வி. தினகரன்.

    * அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்து சென்றவர் டி.டி.வி. தினகரன்.

    * பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.

    * அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்பதை கேட்க கூடாது.

    * கார் இல்லாததால் தான் கிடைத்த காரில் ஏறி சென்றேன்.

    * அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது தான்.

    * டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவது என்பது உட்கட்சி விவகாரம்.

    * செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றார். 

    • மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.
    • வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    * யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ரத்தின கம்பளம் விரித்தனர்.

    * தி.மு.க.விற்கு ஆளுங்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு.

    * எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் வருகைக்கு ஸ்டாலின் கருப்பு கொடி காட்டினார்.

    * நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்பது அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்.

    * நேரம் அதிகம் இருந்ததால் என்னுடன் இருந்தவர்களை அனுப்பி விட்டேன்.

    * நான் மட்டும் அமித்ஷாவுடன் 10 நிமிடம் தனியாக சந்தித்து பேசினேன்.

    * அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றேன்.

    * அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியில் வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன்.

    * முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது.

    * ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.

    * முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

    * வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    * பொதுவெளியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.

    * அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு எந்த தகுதியுமில்லை, அருகதையுமில்லை.

    * முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடிதம் அளித்தேன்.

    * நன்றியை மறந்து அமைச்சர் ரகுபதி செயல்படுகிறார்.

    * கிட்னி முறைகேடு நடந்ததை அரசே ஒத்து கொண்டுள்ளது.

    * தி.மு.க. சட்டமனற் உறுப்பினரின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

    * கிட்னி திருட்டு போன்றவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

    இதனிடையே செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை எடப்பாடி பழனிசாமி காட்டினார். இதன்பின், ஊழல்வாதி என கூறிய செந்தில்பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.  

    • 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது.

    இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை டாக்டர் மற்றும் மகப்பேறு டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த டாக்டர்கள் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடல்நிலை சீரானது. இவர்களில் 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அருண்ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 16 கர்ப்பிணிகள், 11 குழந்தை பெற்ற தாய்ய்மார்களுக்கு ஆண்டிபயாடிக் ஊசி வழக்கம் போல் போடப்பட்டது.

    அப்போது திடீரென அவர்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சீரான இயல்பு நிலைக்கு திரும்பினர். எனவே அவர்களுக்கு போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×