என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
- ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து இன்று 7-வது நாள் சமத்துவ நடைபயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருங்காலக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆணவம், அகம்பாவமிக்க வார்த்தைகளை தமிழ்நாட்டு மண்ணிற்கு வந்து சொல்லிவிட்டு போகின்ற துணிச்சல் வந்துள்ளது. வியர்வை ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திராவிட கோட்டை வெறும் எக்கு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் சதையால் பாதுகாக்கப்பட்டன.
'ஜன நாயகன்' திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல விஜயின் படத்துக்கும் நடந்திருக்கக்கூடும். திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை.
நாங்கள் இதுவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு சொல் கூட, தப்பி தவறி பேசியது கூட கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நேற்று வரை வைக்கவில்லை இனியும் வைக்க மாட்டோம் என்றார்.
- அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
- அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.
* அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
* அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறியதாவது:
* அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.
* ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
- அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யுடியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விஷயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
- அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?
ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.
அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார்.
- கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
- தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.வில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மக்களோடு செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் முடிவை பின்பற்றி தே.மு.தி.க. அ.தி.மு.க. பக்கம் தான் வருவார்கள். தான் இருக்கும் வரை தி.மு.க.வை எதிர்த்தவர் விஜயகாந்த். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.
தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும். அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடியார் இறங்குவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர்.
- மதுபோதையில் இருந்த சபரிராஜன் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்(வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23).
இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.
இதனால் லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்கு சென்று விளையாடுவது உண்டு. கடந்த 5-ந்தேதி லெட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், சபரிராஜன் அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு லெட்சுமணன் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த சபரிராஜன் திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவன் லெட்சுமணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனே சபரிராஜன் அதிர்ச்சி அடைந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை லெட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.
ஏற்கனவே அரிவாள் வெட்டு குறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜனை அதிரடியாக கைது செய்திருந்தனர.
இந்நிலையில், மாணவன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1905-ம் ஆண்டில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது. பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.
- அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காக டபுள் டக்கர் பேருந்தை வழங்கியுள்ளனர்.
- இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை:
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை ரசித்தபடியே பயணம் செய்தவர்களின் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கியது.
முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.
இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காகப் புதிய குளிர்சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்தை வழங்கியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணத்தின் போது விடுத்த வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்தப் பேருந்துக்கான நிதியைத் திரட்டி வழங்கினர்.
இந்த பேருந்து சேவைக்கு தயாராக உள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்தப் பேருந்து சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூரில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
- பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணத்தை பெற்றக்கொண்ட மக்கள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூர் கண்டோன் மென்ட் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை வழங்கிய போது அவருக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை பெற்றவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
- ரெயில்களில் எல்லாம் இடங்கள் நிரம்பிவிட்டதால் மேலும் 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் சொல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் தென் மாவட்ட பகுதி மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இந்த ரெயில்களில் எல்லாம் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.
ஒரு சில ரெயில்களில் ஏசி படுக்கைகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இதேபோல கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களும் நிரம்பி விட்டதால் கூடுதலாக 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரெயில்களில் 8 ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே 6 ரெயில்களும், சென்னை-தூத்துக்குடி இடையே 2 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே 2 சிறப்பு ரெயில்களும் அறிவிக்கட்டு இருக்கிறது.
கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 10 சிறப்பு ரெயில்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 8 ரெயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 2 ரெயில்கள் பகல் நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய கூடியது. திருநெல்வேலி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 13 மற்றும் 20-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் அன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி சேர் கார், சாதாரணமாக உட்கார்ந்து செல்லக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி இதில் இல்லை. இதே போல 14-ந் தேதி திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம் இடையே 12 மற்றும் 19-ந் தேதி பகல் நேர படுக்கை வசதி சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி இடையே 12 மற்றும் 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-சென்ட்ரல் இடையே 13 மற்றும் 20-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை வழியாக செல்கிறது.
இந்த 8 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆன்லைன் வழியாகவும், ஏஜென்சி மூலமாகவும் டிக்கெட்டை பெறுவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.
தெற்கு ரெயில்வே இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு அதிக ரெயில்களை இயக்கி வருவது சிறப்பாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களில் எப்படியாவது பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஒரே நாளில் சேரும் வகையில் பகல் நேர ரெயில்கள் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தற்போது ‘ஜன நாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார்.
- ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததே காரணம் என்றும் இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளதாகவும் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி அவரது வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், தற்போது 'ஜன நாயகன்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார். ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மெர்சல் படத்தில் தேவையின்றி தலையிட்டு தமிழர்களின் பெருமிதங்களை சிதைக்காதீர்கள் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
- அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ம.க.வை பொறுத்தவரை தனிமனிதன் ஆரம்பித்த கட்சி, இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
* அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
* கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு இருக்கிறான். தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை.
* கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி, பா.ம.க. தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
* அன்புமணி செய்த துரோகத்தை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
* அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்னதாகவே தெரியாமல் போய்விட்டது.
* தந்தைக்கு துரோகம் செய்த கும்பலுக்காக வாக்களிக்க வேண்டும் என நினைத்து அன்புமணி தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
* நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி, அந்த கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






