என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணகுடி"

    • இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர்.
    • மதுபோதையில் இருந்த சபரிராஜன் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்(வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23).

    இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.

    இதனால் லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்கு சென்று விளையாடுவது உண்டு. கடந்த 5-ந்தேதி லெட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், சபரிராஜன் அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு லெட்சுமணன் சென்றுள்ளார்.

    இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த சபரிராஜன் திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாணவன் லெட்சுமணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனே சபரிராஜன் அதிர்ச்சி அடைந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை லெட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

    ஏற்கனவே அரிவாள் வெட்டு குறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜனை அதிரடியாக கைது செய்திருந்தனர.

    இந்நிலையில், மாணவன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
    • விழாவில் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சபாநாயகர் அப்பாவு முயற்சியால் சுமார் 300 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி வைத்து உள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக பணகுடி பேரூராட்சி பகுதி களில் பணகுடி செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளி, டி .டி. .டி. ஏ. தொடக்கப் பள்ளி, பணகுடி திரு இருதய தொடக்கப்பள்ளி, வடக்கு இந்து நடுநிலை பள்ளி, அஸ்சே நடுநிலைப்பள்ளி, தளவாய்புரம் டி.டி.டி.ஏ. நடு நிலைபள்ளி, வீர பாண்டி யன் இந்து தொடக்க பள்ளி, நதிப்பாறை இந்து தொடக்கப்பள்ளி, ரோஸ் மியாபுரம் டி.டி.டி.ஏ தொடக்க பள்ளி, ரோஸ் மியா புரம் அரசு உய்நிலைப் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி களுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    இதில் பணகுடி பங்கு தந்தை இருதயராஜ், சேசு அருளானந்தம், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர சுப்பிரமணியன், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், கவுன்சிலர்கள் முத்துக் குமார், பூங்கோதை, ஜெய ராம் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.
    • வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் விவசாயம் பார்த்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு அவரது தோட்டத்தில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று வழக்கம் போல அதிகாலையில் தோட்டத்திற்கு அரிராம் சென்றார்.

    சிறுத்தை புலி கால் தடம்

    சிறுத்தை புலி கால் தடம்

    அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை புலி கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 2 ஆடுகளை அது தூக்கி சென்றதும் தெரியவந்தது. இவரது தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.

    • தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு.
    • வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

    பணகுடி:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றது.

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.

    தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்தது அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 55, 60, 98, 114 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.


    தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது . இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார்படுத்தி விளையாடினர். இப்போட்டியில் உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற்றது.

    இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி என்ற பெண்மணி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2-வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.


    ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல்லை கழுத்தை சுற்றி போடும் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும் 2-வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×