என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000
7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640
5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080
4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
8-1-2026- ஒரு கிராம் ரூ.272
7-1-2026- ஒரு கிராம் ரூ.277
6-1-2026- ஒரு கிராம் ரூ.271
5-1-2026- ஒரு கிராம் ரூ.266
4-1-2026- ஒரு கிராம் ரூ.257
- சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
- அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர்.
2 தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நேற்று நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்கள், தாங்கள் எந்த குற்றச்சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை காண்பதற்காக இறந்த ஜெயராஜின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த பின்பு ஜெயராஜின் மகள் பெர்சிஸ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடமாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
சி.பி.ஐ விசாரணை திருப்திகரமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திடீரென அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம். போலீசார் எங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர். ஈவு இரக்கமின்றி என் தந்தையையும், தம்பியையும் காவல்துறையினர் தாக்கி இருக்கின்றனர். இதற்கு முழு காரணம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜெயராஜ் பென்னிக்ஸ் இறப்பு சம்பந்தமாக ஆய்வு செய்த சுகாதாரத் துணை இயக்குனரின் அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரியதால், அந்த வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி ஸ்ரீமதி ஒத்தி வைத்தார்.
+2
- காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது.
- குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளில் ஒன்றாகும். இந்த காடு சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரத்து 20 எக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு காணப்படுகிறது. திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் இந்த காடு பரவி உள்ளது.
காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தின் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடலாம். அதற்கேற்ற வகையில் மரப்பலகையால் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காடுகளை உயரே இருந்து பார்க்க வசதியாக உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் என இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
அலையாத்திக்காட்டுக்குள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.

குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம். இந்த அலையாத்திக்காட்டை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படகுதுறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்வதை அந்த பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ற சூழல் இங்கு நிலவுவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தற்போது கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும்.
இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை 10.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
திருமுடிவாக்கம்: முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், மேலந்தை தெரு, பாலவராயன் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகநாதபுரம், பூஜா அவென்யூ, பாபு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
- மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
- சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சென்னை:
புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.
அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.
சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
- மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர், கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், விஜயகாந்த் பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரதநாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி நடக்கிறது.இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாநாடு தொடங்கி நடக்கிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அப்போது அவர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டசபை தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.
- இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் 'உங்க கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
- கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
- தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.
- தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் அரசின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்க திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
சென்னை புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம், தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழகத்தில் பழைய நூலகங்கள் மற்றும் நூல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ரூ.218 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்தான் நான் நினைத்து நினைத்து பெருமைப்படக்கூடிய ஒன்று.
திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை புத்தகக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அறிவுப்புரட்சிக்கு முக்கியமானது புத்தகங்கள். என்னை சந்திக்க வருவோர் அளித்த சுமார் 4 லட்சம் புத்தகங்கள் இளைஞர்கள் படிப்பு வட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் வசிக்கும் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.
புத்தகக்காட்சிக்கு இன்னும் அதிகமான மக்கள் வர வேண்டும்; அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அவ்வகையில் புத்தகக்காட்சி செயல்படுவது பாராட்டுக்குரியது.
புத்தகக்காட்சி அரங்குகளை பார்வையிட கட்டணம் வசூலிக்காதது வரவேற்கத்தக்கது; 13 அரங்குகளோடு தொடங்கப்பட்ட புத்தகக்காட்சி இன்று 1000 அரங்குகளோடு 49ஆம் ஆண்டை எட்டியுள்ளது.
தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் களத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
- மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களான சுப்புரத்தினம் மற்றும் பாலகங்காதரன் ஆகியோர் இன்று தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
அரசியல் களத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாகவும், அவரது அணியின் முக்கிய நிர்வாகிகளாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் விலகியது, ஓபிஎஸ் அணிக்குப் பலவீனமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.
உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த தெளிவற்ற நிலை காரணமாகவே இவர்கள் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






