என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
"திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்" என்று காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
கடந்த 2004 இல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை, 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தான். அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பா.ஜ.க., தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் தி.மு.க.வுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
அகில இந்திய அளவில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பின்னால் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பா.ஜ.க.வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் மிகப்பெரிய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய அரசியல் பின்னணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதை கொள்கை ரீதியாக சிந்தித்து செயல்பட வேண்டுமென காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
- இந்துமத வெறுப்பில்லாத அரசு.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"உங்கள் கனவ சொல்லுங்கள்" என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதலமைச்சருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
1. சீரான சட்டம் ஒழுங்கு.
2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
11. இந்துமத வெறுப்பில்லாத அரசு.
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.
- தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* முறியடிக்க முடியாத சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது தான் எனது பாலிசி.
* மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
* இன்று தொடங்கி அடுத்த 30 நாட்கள் தன்னார்வலர்கள் குழு மக்களை நேரடியாக சந்திக்க உள்ளது.
* மத்திய அரசு நிதி வழங்காத போதும் தி.மு.க அரசு அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது.
* உங்கள் வீடு தேடி வரும் தன்னார்வலர்களிடம் உங்கள் கனவுகளை சொல்லுங்க, 2030-க்குள் நிறைவேற்றி தரப்படும்.
* மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.
* தி.மு.க. ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
* எந்த ஆதிக்கத்திற்கும் தலைகுனியாமல் வெல்வோம் ஒன்றாக என தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
* உங்கள் எண்ணங்களுக்கு நான் உருவம் கொடுப்பேன்.
* சொன்னால் சொன்னதை செய்பவன் தான் உங்கள் முன்பு நிற்கும் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.
- தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு பணிகளில் மும்முரமாக கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.
இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.
அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.
அருண் ராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழுவில், பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணிபாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, சத்யகுமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்
இக்குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.
- பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு, அடகு வைத்தது அ.தி.மு.க.
* தமிழ்நாட்டின் கஜானாவை அ.தி.மு.க.வினர் சுரண்டினர்.
* அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் அஞ்சி ஓடினார்கள்.
* கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஆட்சிக்கு வந்தபோதும் தமிழ்நாடு முதலிடம்.
* மகளிருக்கு மாதம் ரூ.1000 தர முடியாது என அ.தி.மு.க கூறியது. ஆனால் உரிமைத்தொகை வழங்கினோம்.
* மக்களின் உயிர்களை வீடுகளுக்கே சென்று காக்கும் வகையில் திராவிட மாடல் அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.
* பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என முதல் கையெழுத்திட்டேன்.
* முட்டுக்கட்டை போடுவதே தனது முதல் வேலை என ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
* பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித்தேர்வு என அனைத்திலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் பா.ம.க. வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
பா.ம.க.வுக்கு 17 அல்லது 18 தொகுதிகளும் ஒரு மேல்சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிய உத்தேச பட்டியலும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
திருப்போரூர், காஞ்சிபுரம், செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.
இதில் கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டால் சில தொகுதிகள் மாறவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
- பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று.
* 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம்.
* மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று கேட்டறிவும் வகையில் புதிய திட்டம்.
* 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
* பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான்.
* விவசாயம், கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்.
* இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
* மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது. பல மாநில மக்களும் சிறந்த மருத்துவத்திற்காக தமிழகம் வருகின்றனர்.
* பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி.
* அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று விருப்ப வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்கு கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாக கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன். பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.
கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். வெற்றியும் பெறுவோம்.
கேள்வி:- நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள். ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு ஆதரவளித்தது ஏன் ?
ப:- எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இரண்டில் ஒன்றை தொடுங்கள். நான் சொல்கிறேன்.
கே:- திருமாவளவன் இருக்கக்கூடிய கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா?
ப:- அரசியலில் எதுவும், எப்போதும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் எப்போதும் நடக்காது என கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளனர். அதே போல் டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
சென்னை:
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த்துறை சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான 'நான் முதல்வன்' திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய் மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்து உள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன்மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன் கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஒருங்கிணைக்கும்.
தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 2 முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.
தன்னார்வலர்கள், 2 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர் பெருமக்களால் அன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும்.
- 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.
கூடலூருக்கு வருகை தரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல் விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
- கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
- இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
சென்னை:
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், த.வெ.க. தலைவரும், 'ஜன நாயகன்' படத்தின் கதாநாயகனுமான விஜய் பேசதாது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி எம்.பி., ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.
கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்! என்று விமர்சித்துள்ளார்.
- தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
- ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி P.T.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.






