என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி தி.மு.க. சார்பில் மாவட்டம் தோறும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று காலை வருகை தந்தனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த பெண்கள் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர். பொங்கல் விழா நடைபெறும் இடம் கரும்பு மற்றும் வாழைத் தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவையும் நின்று கொண்டு இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.

    அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மொத்தம் 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பெண்கள் அனைவருமே ஒரே மாதிரியான புடவை அணிந்து இருந்தனர்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.

    அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12-ந்தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

    மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மரக்கிளை களை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.

    எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640

    5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    8-1-2026- ஒரு கிராம் ரூ.272

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    6-1-2026- ஒரு கிராம் ரூ.271

    5-1-2026- ஒரு கிராம் ரூ.266

    • நாட்டின் மிகவும் பரபரப்பான ரெயில்நிலையங்களில் ஒன்றான இங்கு, நவீன வசதிகள் மற்றும் சிறந்த சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
    • வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம், ஆன்மீகம் மற்றும் மாறுதல் பயணங்களுக்காக தினமும் ஏராளமான பயணிகள் சென்ட்ரலுக்கு வருகின்றனர்.

    சென்னை:

    பயணிகளின் வசதியை மேம்படுத்தும் மற்றும் ரெயில் நிலைய வசதிகளை அதிகரிக்கும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'உள்ள ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்களை 'புதுப்பித்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல்' முறையின் கீழ் மேம்படுத்த தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் முடிவு செய்துள்ளது.

    முன்பு ரெயில்வே நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்கள், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு மிகச்சிறந்த மற்றும் இனிமையான தங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் நவீனப்படுத்தப்பட உள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 9 குளிர்சாதன வசதியுள்ள படுக்கையறைகள் ஆண்களுக்கான தங்கும் கூடத்தில் உள்ள 23 குளிர் சாதன படுக்கைகள், பெண்களுக்கான தங்கும் கூடத்தில் உள்ள 5 படுக்கைகள் மற்றும் பயன்படுத்தப்படாத காலி இடங்கள் ஆகியவை முழுமையாக சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

    நாட்டின் மிகவும் பரபரப்பான ரெயில்நிலையங்களில் ஒன்றான இங்கு, நவீன வசதிகள் மற்றும் சிறந்த சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தின் கான் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ளதால், பயணிகள் இங்கிருந்து நடைமேடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை எளிதாக அணுக முடியும். இது அவர்கள் தங்கும் நேரத்தில் கூடுதல் வசதியை அளிக்கும்.

    வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம், ஆன்மீகம் மற்றும் மாறுதல் பயணங்களுக்காக தினமும் ஏராளமான பயணிகள் சென்ட்ரலுக்கு வருகின்றனர். மேம்படுத்தப்படவுள்ள இந்த வசதிகள், தரமான குறுகிய கால தங்கும் இடங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

    இதற்காக, தகுதியும் அனுபவமும் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து மின்னணு ஏலம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்களை புதுப்பித்து, இயக்கி, பராமரிப்பதற்கான ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் ஆகும். செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், இது மேலும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

    பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்வதிலும், உள்கட்டமைப்பை தொழில் முறையில் பராமரிப்பதிலும் சென்னை கோட்டம் கொண்டுள்ள தொடர் அக்கறையை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

    • த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது.
    • கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை கூட்டவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பிரசாரத்தை விஜய் முன்னெடுக்க இருக்கிறார். சேலம் அல்லது தர்மபுரியில் அவர் மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அந்த மக்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தவும், தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து, அனுப்பிய தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்கிடையே, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணி உருவாகும் பட்சத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் பிரமாண்டமான ஒரு கூட்டத்தை கூட்டவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

    அதேவேளையில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

    இதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழகம் முழுவதும் பொது மக்கள், சிறு, குறு, தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், தேவைகளையும் அறிந்து, தரவுகளை பெற உள்ளது.

    அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டு மொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

    இந்த குழுவினருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும்போது தேவையான உதவிகளை செய்ய வேண்டும்' என கூறி உள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்த சூசக அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் விஜய் கோடிட்டு காட்டினார்.

    அந்த நிகழ்வில் 12 அம்ச வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு, வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு, நிரந்தர வருமானம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், கல்வியில் சீர்திருத்தம், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துதல், வெள்ள பாதிப்பை தடுக்க ஏற்பாடு.

    மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள், தொழில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு சீர்படுத்துதல் என தேர்தல் முன்னோட்ட மினி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று பிற்பகலுக்குள் திரிகோணமலை- யாழ்ப்பாணம் இடையே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    • தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 490 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 310 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று பிற்பகலுக்குள் திரிகோணமலை- யாழ்ப்பாணம் (ஜாஃப்னா) இடையே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனிடையே, சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தாழ்வு மண்டலம் காரணமாக 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் காற்றின் வேகம் குறைந்த பிறகு மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது.
    • 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    'வாட்ஸ்-அப்' மூலம் 51 அரசு சேவைகள் பெறும் விதமாக "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை மாநிலத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாடான உமாஜின்- 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தி உள்ளது. "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையின் மூலம், பொதுமக்கள் அரசு சேவைகளைத் தங்களது செல்போன் வழியாகவே எளிதாகப் பெற முடியும்.

    இதன் மூலம் இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது. பொதுமக்கள் +9178452 52525 என்ற வாட்ஸ்-அப் எண்ணின் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "நம்ம அரசு'' திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அருண் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித்துறை சேவைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பக்தர்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

    மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம அரசு'' தளத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகளை படிப்படியாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியது.
    • இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி தேர்வாகியுள்ளது.

    இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றதற்காக அனைவர்க்கும் நன்றி என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சசிகுமார்.

    • இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம்.
    • இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.

    * கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.

    * கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.

    * கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.

    * தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானம் மக்களுக்கானவை.

    * கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.

    * நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.

    * எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.

    * கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்க இணையான கட்சி ஏதும் இல்லை.

    * கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.

    * தேமுதிக-வை பற்றி ஏளமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

    * 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.

    * தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

    * தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

    * தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

    * யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தாகிவிட்டது.

    * அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

    * எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்கவில்லை. மாவட்ட கழக செயலாளர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும்.

    * இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம். இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும். மற்ற கட்சிகள் அறிவிக்காதது போது, நாம் மட்டும் ஏன் முந்திரி கொட்டையாக முந்த வேண்டும்.

    * நமக்கு கண்ணியம் உண்டு. தொண்டர்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி.

    * தை பிறந்தால் வழி பிறக்கும்.

    • தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
    • தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.

    * கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.

    * கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.

    * கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.

    * தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மக்களுக்கானவை.

    * கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.

    * நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.

    * எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.

    * கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்கு இணையான கட்சி ஏதும் இல்லை.

    * கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.

    * தேமுதிக-வை பற்றி ஏளனமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

    * 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.

    * தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

    * தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

    * தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

    • மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுவகைகள் விற்பனை பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை, 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள்/விற்பனையாளர்கள்/உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×