என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
    • ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் பரிந்துரை இல்லை.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.

    `ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.

    விடியா திமுக ஸ்டாலின் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக, அடுத்தவர்களின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி பெருமைகொள்வதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அதைப் போலவே, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என புதிய பெயருடன் ஸ்டிக்கர் ஒட்டி அரங்கேற்றியுள்ளது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

    இச்செயல் `புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஏதுமில்லை. ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் அகவிலைப் படியும் கிடைக்கும்; ஊதியக் குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய அடிப்படைத் தொகையும் மாற்றியமைக்கப்படும்.

    ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடமிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme) அப்பட்டமான நகல் ஆகும்.

    மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் என்ற பரிந்துரையும், ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ள, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை.

    எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது.

    உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
    • 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த 3-ந்தேதி அறிவித்தார்.

    இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

    • கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
    • இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடம், முடிவெடுக்கட்டும். பொது வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று ஒரு தரப்பு பேசி வருகிறது.

    காங்கிரசுக்குள் இப்படி 2 பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜனநாயகன் பொங்கல்' என்ற பெயரில் காங்கிரசில் ஒரு பிரிவினர் இன்று மாலை கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்த கோரிக்கையை விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோயம்பேட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதில் கூட்டணி விவகாரங்கள் பற்றி பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுவாக தொண்டர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத்தான் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.

    இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.

    கடலூர் மாநாட்டில் விஜயபிரபாகரன், விஜய்க்கு ஒரு ஆலோசனை சொல்வதாக சொல்லி காங்கிரஸ் பற்றி பேசியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் கொல்லை புறமாக செயல்படாது. இதைப்புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், ராம் மோகன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
    • திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

    ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.

    திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.

    தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று கூறியுள்ளார். 

    • அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். 



    • டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது.
    • அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியுள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

    இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்க இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
    • எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.

    கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

    அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

    தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார். 

    • நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.
    • திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பொங்கலுக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசு ரூ.3 ஆயிரம் அறிவித்திருக்கிறது.

    இதன் மூலம் இந்த பொங்கல் மக்கள் பொங்கலாக இல்லாமல் அரசியல் பொங்கலாக மாறி இருக்கிறது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் மக்கள் அரசியலாகும்.

    சட்டமன்ற தேர்தலில் பணபலத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கமும் மக்கள் பலம் உள்ளவர்கள் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.

    இந்த தேர்தலில் நிச்சயம் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

    ஜனநாயகன் படத்தை போன்று இதற்கு முன்னர் எனது படங்கள் உட்பட பல படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே அதனைப் பற்றி இப்போது பெரிதாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

    அதைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன அதையெல்லாம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராட்டம், நர்சுகள் போராட்டம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜனநாயகன் பட விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.

    பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ரூ. 6,800 கோடியை செலவிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் 4½ ஆண்டுகளில் 4 லட்சம் கோடியையும் கடன் வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

    இந்த தேர்தல் திராவிடருக்கும் தமிழருக்கும் ஆன தேர்தலாக இருக்கும். திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதனை நிச்சயம் செய்து காட்டுவோம் என்றார். 

    • ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.
    • கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கேவிஎன் புரோடெக்சன் நிகழ்கால அரசியல் போக்குகளை எதிரொலிக்கும் "ஜனநாயகன்" என்ற பெயரில் திரைப்படம் தயாரித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட தேதி நிர்ணயிக்கப்பட்ட, இந்தத் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 15 தேதி தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.

    தணிக்கை வாரியத்தின் மூலம் 16 பேர் படம் பார்த்து, பரிசீலித்ததன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டு, படத்தை 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் என சான்று வழங்க முடிவு செய்துள்ளது.

    தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து, படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் இது தொடர்பான விசாரணை நடத்தி வருகிறது.

    ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.

    கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, திரைப்படத் தணிக்கைக் குழுவை வலிறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

    • பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
    • விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.

    இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

    இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.

    ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

    இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

    இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.

    இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.

    எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

    தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
    • தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.

    கொளத்தூர்:

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    * தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.

    * கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனர்ஜி வருகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    * தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.

    * தி.மு.க.வினரை போல் யாரும் வேலை செய்ய முடியாது என பா.ஜ.க.வினரே புகழ்கின்றனர்.

    * 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    * தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்று பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஜனநாயக டாக்டர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர் 19-ந்தேதி இதுகுறித்து நிதித்துறை செயலாளர் இடம் பேசி முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

    19-ந்தேதி எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும், பின்னர் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து சாகும் வரை போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொங்கலுக்குள் எங்களுக்கு தீர்வு கிடைக்குமா? என்று பார்ப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×