என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்.
    • ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.

    உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் அதிக மாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகின் பல நாடுகளில் இருந்து வாழுகின்ற நீங்கள் தமிழ் உணர்வோடு தமிழ் பற்றோடு தமிழ்நாட்டின் மீது இருக்க கூடிய பாசத் தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்துள்ளீர்கள்.

    வெளிநாடுகளில் நீங்கள் பல விதமான விழாக்களை பார்த்திருப்பீர்கள். கொண் டாடியிருப்பீர்கள். ஆனால் இது எதுவும் நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது.

    ஏனென்றால் பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில் அயலக தமிழக உறவுகள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பது என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என் குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.

    அயலகத் தமிழர் தினத்தை நம் திராவிட மாடல் அரசு ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் நான் தவறாமல் கலந்து வருகிறேன்.

    இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான தலைப்பு 'தமிழால் இணைவோம்... தரணியில் உயர்வோம்...' என்ற மிகச் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி.

    தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் போட்டி போட முடியாது.

    ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டிதான் நம் அத்தனை பேரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.

    அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்தால்தான் இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது.

    அந்த வகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அந்த பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது.

    அதைவிட முக்கியம் அவர்களது நலன்களை பாதுகாக்கின்ற இந்த பணி என்பது மிக முக்கியம். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான் சின்ன சின்ன வேலைகளை செய்ய நிறைய பேர் வெளி நாடு போவார்கள். அங்கு செட்டில் ஆவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருந்து என்ஜினீ யர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறீர்கள்.

    தொழிலாளியாக சென்ற காலத்தில் குடும்பத்தை இங்குவிட்டு விட்டு தனியாக அங்கு சென்றிருப்பீர்கள். இப்போது குடும்பத்தையும் அழைத்துச் சென்று அங்கேயே தங்குகிற அளவுக்கு பெரிய வேலைகளில் இருக்கிறீர்கள்.

    இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பெயர்தான் திராவிட மாடல் இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் போதுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் நமது முதலமைச்சர் அயலக தமிழர் நல வாரியத்தை முதன் முதலில் தொடங்கி வைத் தார். இதில் இன்று 32 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறீர்கள்.

    இதன் மூலம் அயலக தமி ழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்மைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    உக்ரைன், ஈரான், இஸ் ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்தபோது அங்கிருந்த தமிழர்களை பாதுகாப்பாக நம்முடைய துறைதான் மீட்டு வந்தது.

    வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் அதற்கு தீர்வுகாண இந்த துறை எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இங்கு தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக உங்களது முயற்சியின் காரணமாக இன்றைக்கு நம்பர்-1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அந்த சாதனையில் உங்களது பங்கு மிகப்பெரியது.

    நம் அரசின் சார்பில் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களின் கனவுகளை கேட்டு அறியும் இந்த நிகழ்ச்சி போல், அயலக தமிழர்களும் உங்க கனவுகளை இந்த வாரி யத்தின் பொறுப்பாளர்க ளிடம், அமைச்சர் நாசரிடம் தெரியப்படுத்துங்கள்.

    உங்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நமது முதலமைச்சர் நிச்சயம் தீட்டி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.

    இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

    அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .

    இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது

    • திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    • டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
    • டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 7 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார்.

    கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.

    மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது.

    தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னார் பகுதிகளில் நிலவி வருகிறது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
    • கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சுமார் 11:00 மணி அளவில் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்.
    • 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.

    அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

    • தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
    • ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மோசடியானது. அரசு ஊழியர்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டம் கூட திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாது என்று தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

    பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடியான திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அதனால், ஏற்படும் பலன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் என்று பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. அதனால் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று அஞ்சிய அரசு ஊழியர்களில் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, திட்டத்திற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று வினா எழுப்பியது. அதற்கு 2 வாரங்களில் அரசாணை வெளியிடப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்படி நேற்றைய தேதியிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தான் இப்போது அரசாணையாக வெளியிடப்பட்டது. ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் எழுப்பிய எந்த வினாவுக்கும் அதில் விடை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; ஏமாற்று வேலை; யாருக்கு பயனளிக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் 01.01.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விதிகள் தனியாக வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 40 நாள்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இதற்கான விதிகள் வகுக்கப்பட வாய்ப்பில்லை.

    எனவே, திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்பதை அரசாணையில் திமுக அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம் ஆகும். இதற்கான தண்டனையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு தருவார்கள்.

    • ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும்.

    தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்றும், இதனைத் திறம்பட மேற்கொள்ள மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய

    ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்திட வேண்டுமென்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவின் மூலமாக, விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போவதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, இந்தக் கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவானது, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூகநீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதி செய்வதாகவும் உள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளதால், இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியுமென்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இல்லாவிடில், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும் எனவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே,

    1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவும்.

    2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை ( pilot study) உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பிரதமரின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    ×