என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார்.
- கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
மதுரை:
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
அப்போது வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விஜய் அரசியலில் சாதித்து விடலாம் என மணல் கோட்டை கட்டுகிறார். ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எத்தனை தொகுதியில் போட்டி என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தனது 82 வயதில் நடைபயணத்தை அறிவித்தார். இதற்கு டாக்டர்கள் மறுத்தபோதிலும் அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் போது அவர் சிரமப்பட்டார். ஆனாலும் அவரின் சுயநலத்திற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. வைகோவின் தியாகத்தை கொச்சைபடுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல என்றார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். மாட்டுத் தாவணியில் அவருக்கு கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண் டார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார். அதனை தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
- மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
- பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.
மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.
ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!
தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?
இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான், அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.
அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
"அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
- சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது.
அதன் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் பேருந்தில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000
7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-1-2026- ஒரு கிராம் ரூ.275
10-1-2026- ஒரு கிராம் ரூ.275
9-1-2026- ஒரு கிராம் ரூ.268
8-1-2026- ஒரு கிராம் ரூ.272
7-1-2026- ஒரு கிராம் ரூ.277
- அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
- கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கூடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் 13ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
- இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும்.
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .
பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது
இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
- சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.
கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு ஆகும். முதன்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை.
பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.
சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.
பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதன்பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.






