என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

    இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    அதன்படி திருச்சியில் இருந்து காரில் வரும் அவர் தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.

    பின்னர் அவர் பட்டுக்கோட்டையில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    இதையடுத்து திருநல்லூரியில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்துவின் தாயார் படத்திறப்பு , கல்யாண ஓடையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் துரைசெந்தில் சகோதரர் ஆதிமுத்து வள்ளாலதேவர் படத் திறப்பு, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள தூய பவுலின் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில், பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசைவ அசனவிருந்து நடைபெற்றது.

    இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த ஆலயத்தில் நடைபெறும் அசன விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்று ஒற்றுமையாக உணவருந்தி வருவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    • தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. தொகுதி ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டங்கள் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார், பினுலால் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    • பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
    • பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தருமபுரி:

    தமிழகத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வகையில் தருமபுரியில் பெண்கள் மட்டுமே தேரினை வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிர மணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 21 ந்தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.

    இந்த தைப்பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தைசப்பூசத்தையொட்டி பெண் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிவ சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    அதேபோல் ஆண் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.

    விழாவில் சிவசுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானையுடன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

    தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தேர் நிலை வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். சிலர் சில்லறை காசுகளையும் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீர்களா? என்று கேட்பது விஜயகாந்தின் பழக்கம்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் விஜயகாந்த் சமாதியில் தே.மு.தி.க.வினரும், பொது மக்களும் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இதனால் தே.மு.தி.க. அலுவலக பகுதியில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    விஜயகாந்த் மரணம் அடைந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகப்போகிறது. நேற்று விஜயகாந்த் சமாதியில் அதிகம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருப்பதாக தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படும் அன்னதானத்தை பலரும் சாப்பிட்டு வருகிறார்கள்.

    தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீர்களா? என்று கேட்பது விஜயகாந்தின் பழக்கம். முதலில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் அப்புறம் பேசலாம் என்று விஜயகாந்த் பசியாற்றி வந்துள்ளார். அவரது கொள்கைபடியே தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    • தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
    • ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

    • திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம்-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அ.ம.மு.க. கட்சி கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    முன்னதாக திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்றும் அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கும் பொருட்டு, மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தமிழக மக்களைக் காக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழகக் காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது.
    • கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.


    பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×