என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன. திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து, பவதாரிணியின் உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    • லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர்.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வீராங்கனைகள் தங்கி இருந்தனர். கால்பந்து போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்று இன்று நடைபெற உள்ளது. விளையாட்டில் கலந்துகொள்ள 5வது தளத்தில் இருந்து லிஃப்ட் மூலம் 10 -க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் சென்றனர். லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.

    விடுதி ஊழியர்கள் கடப்பாறை உள்ளிட்ட கருவிகளை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடுதி ஊழியர்களின் முயற்சி பலன் அளிக்காத நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இயந்திரங்கள் மூலம் லிஃப்டை உடைத்து, சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டோம்.
    • தொகுதி நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் - கழக அரசின் திட்டங்களின் நிலை உள்ளிட்டக் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக பாராளுமன்றத் தேர்தல் மேற்பார்வை - ஒருங்கிணைப்புக்குழு சார்பிலான ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர், மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டோம்.

    தொகுதி நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் - கழக அரசின் திட்டங்களின் நிலை உள்ளிட்டக் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

    வெறுப்பையும், வேற்றுமையையும் விதைக்கும் பாசிஸ்ட்டுகளை விரட்ட, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம் என கேட்டுக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
    • பாலத்தின் பாதி பகுதிகள் கட்டப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே உள்ள லெவல் கிராசிங்கில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை- திருவள்ளூர் இடையே செல்கின்றன.

    ஆனால் பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இந்த பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பட்டாபிராம் பாலம் கட்டுமான திட்டம் இன்னும் கனவு திட்டமாகவே உள்ளது. பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. மேம்பாலத்தின் இருபுறமும் 7.25 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலைக்கு 3.5 மீட்டர் அகலமே விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த வழியாக ஆவடி மற்றும் திருவள்ளூர் நோக்கி தினமும் லட்சக்கணக்காணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் 4 வருடங்களுக்கு முன்புதான் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலம் கட்டுமான பணிகள் காலதாமதம் ஆனது.

    பின்னர் வருவாய் துறையினர் தலையிட்டு 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் பாதி பகுதிகள் கட்டுப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சர்வீஸ் சாலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த வழியாக ஆம்புலன்சு செல்வதில் கூட சிரமமாக உள்ளது. அவசர காலங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டாபிராம் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்தில் யூ வளைவில் திரும்பி தற்போதுள்ள சாலையில் ஏறி திருநின்றவூர் நோக்கி சென்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதிகாரிகள் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாலம் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
    • வீடியோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சென்னை:

    மறைந்த நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    மேலும், விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

    இதுதொடர்பான வீடியோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சேலம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெறுவது எப்படி?
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில உரிமைகளை நாம் பெற முடியும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    இந்நிலையில் சேலம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெறுவது எப்படி? என்று சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேள்வி எழுப்பியது. மேலும்,

    * திமுக நிர்வாகிகளுக்குள் நிலவும் போட்டிகளை விட்டு விட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    * இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில உரிமைகளை நாம் பெற முடியும்.

    * ஒரு சில திமுக நிர்வாகிகள் அதிமுக உடன் இணைந்து செயல்படுவதாக புகார்... அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.
    • தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி நகரில் தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்ப டுகிறது. மேலும் இந்த ஏரி முழுவதும் தாமரை இலைகள் பரவி காணப்படுகிறது. நீர்வளத்துறையினர் இந்த ஏரியை பராமரித்து வருகிறார்கள். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான இந்த ஏரி மாசடைந்து வருகிறது. இந்த ஏரியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்த குட்டையாக மாறி வருகிறது.

    தாமரை ஏரியின் வடக்கு திசையில் பெத்தி குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட அருண் நகர் உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஏரியின் அருகாமையில் ஈஸ்வரன், அய்யாசாமி ஆகிய கோவில்களும் உள்ளன. இங்கு வருபவர்கள் ஏரி தண்ணீரை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    அப்பகுதி வாசிகள் தாமரை ஏரியில் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

    இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.

    தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

    திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள்

    திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா

    தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.: பகோர்லா செபாஸ் கல்யாண்

    சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி: சக்திவேல்

    சென்னை கொளத்தூர் துணை கமிஷனர்: பாண்டியராஜன்

    தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சாமிநாதன்

    உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி.: ஷியாமளா தேவி

    வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சரவணகுமார்

    கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ரோஹித் நாதன் ராஜகோபால்

    திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ராஜராஜன்

    நெல்லை தலைமையிட துணை கமிஷனர்: அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார்.
    • கல்வி ஒன்றே சமுதாயத்தை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாகும் என நெல்சன் மண்டேலா தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னரும், வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

    எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். 

    மருத்துவம் படிப்பில் 6753 மாணவர்களுக்கும், பல் மருத்துவம் 1944 மாணவர்களுக்கு, இந்திய மருத்துவம் 2002 மாணவர்களுக்கும், துணை மருத்துவம் 18,986 மாணவர்கள் என மொத்தமாக 29,865 பேருக்கு இன்று பட்டங்கள் வழங்கப்பட்டது.

    இதில் 73 பேருக்கு தங்க பதக்கம், 21 வெள்ளி பதக்கங்கள், பல்கலைக்கழகம் சார்பில் 48 என மொத்தமாக 179 பேருக்கு இங்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 10 பதக்கங்களை மாணவி சிந்து பெற்றார். மாணவர் முகமது யாஷின் 9 பதக்கங்களை பெற்றார். கவர்னர் ஆர்.என்.ரவி 134 மாணவர்களுக்கு நேரடியாக வழங்கினார்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசும்போது, "பட்டம் முடித்த பிறகும் வாசிப்பு பழக்கத்தை தொடர வேண்டும். கல்வி ஒன்றே சமுதாயத்தை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாகும் என நெல்சன் மண்டேலா தெரிவித்து உள்ளார். ஆகையால் அதேபோன்று கல்வி மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சங்கி என்றால் "லால் சலாம்" படத்தில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றார் ஐஸ்வர்யா
    • மோடி-அமித் ஷா ஜோடியை கிருஷ்ணர்-அர்ஜுனன் என நேரடியாக பாராட்டினார் ரஜினி

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் படம், "லால் சலாம்" (Lal Salaam). இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று, (ஜனவரி 26), இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, "என் தந்தையை சங்கி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரஜினிகாந்த் சங்கி அல்ல. அவர் சங்கியாக இருந்திருந்தால், லால் சலாம் போன்ற திரைப்படத்தில் பங்கேற்கவே சம்மதித்திருக்க மாட்டார்" என தெரிவித்தார்.

    மகள் ஐஸ்வர்யா இவ்வாறு பேசும் போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

    "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்" (RSS) எனும் அமைப்பிலிருந்து உருவானது இன்றைய பா.ஜ.க. ஆர். எஸ். எஸ். அமைப்பினை ஆதரிப்பவர்களை "சங்கி" என அதன் எதிர்ப்பாளர்கள் அழைக்கின்றனர்.

    பா.ஜ.க. தலைவர்களுக்கும் ரஜினிகாந்திற்கும் நட்பு ரீதியான உறவை தாண்டி, அரசியல் ரீதியாக பிணைப்பு இருந்தது அனைவரும் அறிந்ததே.

    தேசிய நதிநீர் இணைப்பு முயற்சியை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளதால் அக்கட்சிக்கே தனது வாக்கு என முன்னர் ஒரு பொதுத்தேர்தலின் போது ரஜினி தெரிவித்திருந்தார்.


    சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுடனான சந்திப்பின் போது, அவர் எனக்கு கடவுளை போன்றவர் என கூறினார்.


    2016 பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியை ரஜினி பாராட்டினார்.


    குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act) கொண்டு வந்த போது அதனை வரவேற்று, "அதில் இஸ்லாமியர்கள் அச்சப்பட ஒன்றும் இல்லை" என கூறினார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் போது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மகாபாரத அர்ஜுனர்-கிருஷ்ணர் என பாராட்டினார்.


    மேலும், மோடிக்கு எதிராக அரசியலில் பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் போது, "பலர் ஒன்று சேர்ந்துதான் ஒருவரை எதிர்க்க முடியும் எனும் நிலை இருந்தால் அந்த ஒருவர்தானே பலசாலி" என மோடியை நேரடியாக புகழ்ந்தார்.


    2021ல் பா.ஜ.க. அரசு, ரஜினிகாந்தின் நீண்டகால திரைத்துறை பங்களிப்பிற்கு அவருக்கு சினிமாத்துறையின் புகழ் பெற்ற உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.


    புகை மற்றும் மது ஆகியவற்றின் தீமைகள் குறித்து பேசும் போது, உடலாரோக்கியத்தை காக்க, அசைவ உணவிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். அதை விமர்சித்தவர்களுக்கு, "அதில் தவறில்லை" என பதிலளித்திருந்தார்.


    தற்போது உ.பி.யின் அயோத்தியில் பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.


    இப்பின்னணியில், தனது திரைப்படங்கள் வெளியாகும் சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதன் மூலம் திரைப்பட வெற்றியை அதிகரிக்க வழிகோலுவதும் ரஜினிகாந்திற்கு வழக்கமான ஒன்று என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.

    இம்முறை, தான் அதிகம் பேசாமல், தனது மகளின் உரையின் மூலம் அதை நடத்தி கொள்ள முயல்வதாகவும், தான் "சங்கி அல்ல" என காட்டிக் கொண்டு அதன் மூலம் சங்கி எதிர்ப்பாளர்களின் புறக்கணிப்பை சமாளிக்க திட்டமிடுவதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர்.

    ×