search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாபிராம் மேம்பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள்?- 5 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் பயணிகள்
    X

    பட்டாபிராம் மேம்பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள்?- 5 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் பயணிகள்

    • பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
    • பாலத்தின் பாதி பகுதிகள் கட்டப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே உள்ள லெவல் கிராசிங்கில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை- திருவள்ளூர் இடையே செல்கின்றன.

    ஆனால் பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இந்த பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பட்டாபிராம் பாலம் கட்டுமான திட்டம் இன்னும் கனவு திட்டமாகவே உள்ளது. பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. மேம்பாலத்தின் இருபுறமும் 7.25 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலைக்கு 3.5 மீட்டர் அகலமே விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த வழியாக ஆவடி மற்றும் திருவள்ளூர் நோக்கி தினமும் லட்சக்கணக்காணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் 4 வருடங்களுக்கு முன்புதான் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலம் கட்டுமான பணிகள் காலதாமதம் ஆனது.

    பின்னர் வருவாய் துறையினர் தலையிட்டு 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் பாதி பகுதிகள் கட்டுப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சர்வீஸ் சாலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த வழியாக ஆம்புலன்சு செல்வதில் கூட சிரமமாக உள்ளது. அவசர காலங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டாபிராம் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்தில் யூ வளைவில் திரும்பி தற்போதுள்ள சாலையில் ஏறி திருநின்றவூர் நோக்கி சென்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதிகாரிகள் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாலம் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்' என்றார்.

    Next Story
    ×