search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Super Star Rajinikanth"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சங்கி என்றால் "லால் சலாம்" படத்தில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றார் ஐஸ்வர்யா
    • மோடி-அமித் ஷா ஜோடியை கிருஷ்ணர்-அர்ஜுனன் என நேரடியாக பாராட்டினார் ரஜினி

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் படம், "லால் சலாம்" (Lal Salaam). இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று, (ஜனவரி 26), இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, "என் தந்தையை சங்கி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரஜினிகாந்த் சங்கி அல்ல. அவர் சங்கியாக இருந்திருந்தால், லால் சலாம் போன்ற திரைப்படத்தில் பங்கேற்கவே சம்மதித்திருக்க மாட்டார்" என தெரிவித்தார்.

    மகள் ஐஸ்வர்யா இவ்வாறு பேசும் போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

    "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்" (RSS) எனும் அமைப்பிலிருந்து உருவானது இன்றைய பா.ஜ.க. ஆர். எஸ். எஸ். அமைப்பினை ஆதரிப்பவர்களை "சங்கி" என அதன் எதிர்ப்பாளர்கள் அழைக்கின்றனர்.

    பா.ஜ.க. தலைவர்களுக்கும் ரஜினிகாந்திற்கும் நட்பு ரீதியான உறவை தாண்டி, அரசியல் ரீதியாக பிணைப்பு இருந்தது அனைவரும் அறிந்ததே.

    தேசிய நதிநீர் இணைப்பு முயற்சியை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளதால் அக்கட்சிக்கே தனது வாக்கு என முன்னர் ஒரு பொதுத்தேர்தலின் போது ரஜினி தெரிவித்திருந்தார்.


    சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுடனான சந்திப்பின் போது, அவர் எனக்கு கடவுளை போன்றவர் என கூறினார்.


    2016 பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியை ரஜினி பாராட்டினார்.


    குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act) கொண்டு வந்த போது அதனை வரவேற்று, "அதில் இஸ்லாமியர்கள் அச்சப்பட ஒன்றும் இல்லை" என கூறினார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் போது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மகாபாரத அர்ஜுனர்-கிருஷ்ணர் என பாராட்டினார்.


    மேலும், மோடிக்கு எதிராக அரசியலில் பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் போது, "பலர் ஒன்று சேர்ந்துதான் ஒருவரை எதிர்க்க முடியும் எனும் நிலை இருந்தால் அந்த ஒருவர்தானே பலசாலி" என மோடியை நேரடியாக புகழ்ந்தார்.


    2021ல் பா.ஜ.க. அரசு, ரஜினிகாந்தின் நீண்டகால திரைத்துறை பங்களிப்பிற்கு அவருக்கு சினிமாத்துறையின் புகழ் பெற்ற உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.


    புகை மற்றும் மது ஆகியவற்றின் தீமைகள் குறித்து பேசும் போது, உடலாரோக்கியத்தை காக்க, அசைவ உணவிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். அதை விமர்சித்தவர்களுக்கு, "அதில் தவறில்லை" என பதிலளித்திருந்தார்.


    தற்போது உ.பி.யின் அயோத்தியில் பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.


    இப்பின்னணியில், தனது திரைப்படங்கள் வெளியாகும் சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதன் மூலம் திரைப்பட வெற்றியை அதிகரிக்க வழிகோலுவதும் ரஜினிகாந்திற்கு வழக்கமான ஒன்று என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.

    இம்முறை, தான் அதிகம் பேசாமல், தனது மகளின் உரையின் மூலம் அதை நடத்தி கொள்ள முயல்வதாகவும், தான் "சங்கி அல்ல" என காட்டிக் கொண்டு அதன் மூலம் சங்கி எதிர்ப்பாளர்களின் புறக்கணிப்பை சமாளிக்க திட்டமிடுவதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர்.

    ×