என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜல்லிக்கட்டு போட்டிய மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
    • காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வல்லம் அடுத்த திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி காளைகள் திறந்துவிடப்படும். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 310 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர். பலர் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர்.

    இதேபோல் களத்தில் நின்று விளையாடிய காளைகளை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர்.

    காளையை வீரர்கள் அடக்கும் போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

    போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, திருக்கானூர்பட்டி பங்கு தந்தை தேவதாஸ் இக்னேசியர் மற்றும் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    • கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
    • பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    உடுமலை:

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. 

    • ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும்.

    கோவை:

    கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார்.

    2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

    இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

    குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். இதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார்.
    • அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பின் அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவலை வழங்குவோம் என தெரிவித்தார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வின் மகனும், மருமகளும் மோசமான செயலில் ஈடுபட்டார்கள் அதற்கு அடுத்ததாக பத்திரிகையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தான் அ.தி.மு.க பிப்ரவரி 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

    பா.ஜ.க தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின் மக்கள் வெளிப்படுத்துவார்கள். அதன் பின் அண்ணாமலை அதை உணர்வார். அவர் என் மண், என் மக்கள் என்பதை விட்டு விட்டு சென்னை கமலாலயத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது போல அவர் செல்லும் இடங்களில் பேசி வருகிறார்.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்து இருப்பார். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 1998 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி வட மாநிலத்தில் தான் இருந்தது. தமிழகத்தில் பா.ஜ.க கிடையாது. ஜெயலலிதா தான் பா.ஜ.க.வை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார். வடமாநிலத்தில் மட்டும் இருந்த பா.ஜ.க.வை தென்மாநிலத்தில் ஜெயலலிதா தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பா.ஜ.க.வை பின்னிலைப்படுத்தி பேசி வருகிறார். அவர் அரசியல் வரலாறு தெரியாமல் தலை சிறந்த தலைவர் நரேந்திர மோடி என கூறி அவரது நற்பெயரை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

    அண்ணாமலை வாஜ்பாய் பற்றி பேசுவது இல்லை. அண்ணாமலை அவர் கட்சினுடைய தலைவர்களை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து அவருடைய பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமர் கோவிலை பொருத்தவரை ராமர் அனைவருக்கும் தெய்வம் அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால் அந்த தெய்வம் சும்மா இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
    • அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

    விராலிமலை:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    செண்டை மேளம் முழங்க கரகாட்டம் தப்பாட்டம் மற்றும் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பூரண கும்ப மரியாதை அளித்து முருகன் கோவில் நினைவாக வேல் மற்றும் சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்றார்.

    அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி காரை விட்டு இறங்கி அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திறம்பட செயல்பட்டு தமிழகத்தில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க உறுதுணையாக இருந்தவர் விஜயபாஸ்கர்.


    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விராலிமலை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் விடிவு பிறக்கும். தீய சக்தியான தி.மு.க.வை மக்கள் விரட்டியடிப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டமும் மக்கள் முகத்தில் தெரியும் பிரகாசமும் அமைந்துள்ளது. விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உள்ளடங்கியுள்ள கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன்(தெற்கு), ராஜேந்திரன்(வடக்கு), திருமூர்த்தி(கிழக்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், ம.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தேர்தலாகும்.
    • பிப்ரவரி 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. தொலை நோக்கு பார்வையில் எடுத்த முடிவு அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்தோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருந்து களம் காண இருக்கிறோம்.

    கடந்த 30 ஆண்டுகாலமாக நாம் சந்திக்காத சோதனைகள், ஏளனங்கள் இல்லை. அவற்றையெல்லாம் உரமாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கற்றுத் தந்த அரசியலின்படி உறுதியுடன் பயணித்து வருகிறோம். கொள்கை கொடியை உயர்த்திப் பிடிக்கும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக ம.தி.மு.க. தமிழக அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.


    வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், ம.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பு வலுப்பெற்று திருத்தணி முதல் குமரி வரை எழுச்சி பெற்றிருக்கிறது. தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் முடித்து விட்டனர்.

    பிப்ரவரி 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் நிதி திரட்டும் பணிகளை முடிக்கும் வகையில் பிப்ரவரி 11 முதல் நிதி அளிப்புக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    எனவே, குறிப்பிட்ட தேதிக்குள் நிதி திரட்டும் பணியை முடித்து தேர்தலில் மதிமுகவை வெற்றிகரமாக களம் காணச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
    • அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.


    மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.

    2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 803 கனஅடியாக குறைந்துளளது.

    இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 37.14 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
    • அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    * பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
    • அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தட்பகராஜ்

    தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

    வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

    வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

    தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

    அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

    வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

    வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • தென்காசியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    • இந்த விபத்தால் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (27), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), வேல் மனோஜ் (29), முகேஷ் என்ற மனோ (27) இவர்கள் 5 பேரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இதில் முகேஷ் என்ற மனோவின் அக்காள் கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் (27). இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    இவர்கள் 6 பேரும் நேற்று இரவு குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் மீண்டும் ஊர் திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டி வந்தார்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் முருகபாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில், லாரி புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிபட்டிக்கும், புன்னையாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஷ், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ராஜா மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

    அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பிரகாசை போலீசார் கைதுசெய்தனர். விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து லாரியில் கேரளாவிற்கு சிமெண்டு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெகு தூர பயணம் என்பதால் இன்று அதிகாலை தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வந்த போது லாரி டிரைவர் பிரகாஷ் கண் அயர்ந்து தூங்கி உள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக லாரி மோதி உள்ளது. இதனால் 6 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

    இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புளியங்குடியில் இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

    தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் நோக்கில் 2024-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இதைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்."

    "கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்தேன். அந்த பயணத்தின் போது 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது 1,342 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது."

    "ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதில் ஸ்பெயின் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

    ×