search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி அருகே சோகம்: கார்-லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி
    X

    தென்காசி அருகே சோகம்: கார்-லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி

    • தென்காசியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    • இந்த விபத்தால் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (27), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), வேல் மனோஜ் (29), முகேஷ் என்ற மனோ (27) இவர்கள் 5 பேரும் நண்பர்கள். கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இதில் முகேஷ் என்ற மனோவின் அக்காள் கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் (27). இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    இவர்கள் 6 பேரும் நேற்று இரவு குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் மீண்டும் ஊர் திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டி வந்தார்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் முருகபாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில், லாரி புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிபட்டிக்கும், புன்னையாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஷ், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ராஜா மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.

    அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பிரகாசை போலீசார் கைதுசெய்தனர். விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து லாரியில் கேரளாவிற்கு சிமெண்டு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெகு தூர பயணம் என்பதால் இன்று அதிகாலை தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வந்த போது லாரி டிரைவர் பிரகாஷ் கண் அயர்ந்து தூங்கி உள்ளார். அப்போது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக லாரி மோதி உள்ளது. இதனால் 6 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

    இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புளியங்குடியில் இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×