என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.
மாலே:
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குழு நாளை முதல் முறையாக கூடுகிறது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
- தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.
முன்னதாக, நேற்று கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
- முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை:
கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.
முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.
- பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
- மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.
இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.
இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.
இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.
மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து தங்கினார்.
பின்னர் இன்று காலை 9 மணியளவில் திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான செங்கிப்பட்டி பகுதியில் திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வல்லம் பிரிவு சாலைக்கு சென்றார். அங்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு முடிந்த பின்னர் அங்குள்ள 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க கொடியேற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டிற்கு குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் எண்ணற்ற பலவளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். காவரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம். நாம் ஆட்சியில் இருந்த வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நீர்வள மேம்பாடு சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரத்தநாடு சென்ற அவருக்கு ஒரத்தநாடு தொகுதி சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் தாரை தப்பட்டத்துடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்புக்கு பின்னர் பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார். பட்டுக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாவட்ட செயலாளருமான சி.வி.சேகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மதுக்கூர் துரை செந்திலின் அண்ணன் ஆதிமுத்து வள்ளாள தேவர் உருவப் படத்தினை திறந்து வைத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநல்லூரியில் தமிழ்நாடு பாடநூல் வாரிய முன்னாள் தலைவர் தங்கமுத்து, விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரின் தாயார் மறைந்த சொர்ணத்தம்மாள் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
பின்னர் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதையடுத்து மாலையில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து மாலை 6 அளவில் திருச்சிக்கு காரில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை மாவட்ட வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர், கொடி கம்பங்கள், ஆர்ச்சுகள், பிரமாண்ட கட் அவுட்கள், தோரணைகள் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி வருகையால் தஞ்சை மாவட்டம் விழாக்கோலம் பூண்டது.
- நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது.
- பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.
அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
உறைபனி மற்றும் கடுங்குளிரால் பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் சாலையோரங்களில் தீமூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.
குதிரை பந்தய மைதானம் மற்றும் ஊட்டியின் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை உறைபனி பெய்வதால், வீடுகளின் முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களில் ஒரு அங்குலம் வரை பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியின் நகராக ஊட்டி மாறிவருகிறது. இன்று வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து இருப்பதுடன், 72 சதவீதம் ஈரப்பதம் பதிவாகி உள்ளது.
மேலும் பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.
- டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது.
- உயர்தர மது வகைகள் ‘லைட்’ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.
ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக 'டாஸ்மாக்' கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆப் பாட்டில் ரூ.20 அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.
பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்கிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது. சாதாரண மது வகைகளில் 43 பிராண்டுகளும், நடுத்தர அளவில் 49 பிராண்டுகளும், 128 பிரீமியம் பிராண்டுகளும் விற்பனையாகி வருகிறது.
உயர்தர மது வகைகள் 'லைட்' கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அரசுக்கும் இப்போது நிதி நெருக்கடி அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
- சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.
- தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்துவிட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று பா.ஜ.க 25 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் திருமாவளவன். பா.ஜ.க.வுக்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி.
ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல் படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன் என்று நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம், பக்கம் 273-ல் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். அவர் எழுதியதை அவரது மகனே படித்ததில்லை எனத் தெரிகிறது.
மத்தியில் உள்ள 76 அமைச்சர்களின் பட்டியலில் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
மத்திய அரசின் 76 அமைச்சர்களில், 16 சதவீதம் அமைச்சர்கள், அதாவது 12 பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தமிழக அமைச்சரவையில் 10 சதவீதம் கூட இல்லை.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
- 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.
அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
- 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
- நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.
இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.
- விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரியும் அதற்கு சட்டப்படி உத்தரவு இருந்தும் திறந்து விடாமல் மெத்தன போக்கில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






