search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வேளாண்மையை பாதுகாத்தது அ.தி.மு.க. அரசு-  எடப்பாடி பழனிசாமி
    X

    தமிழகத்தில் வேளாண்மையை பாதுகாத்தது அ.தி.மு.க. அரசு- எடப்பாடி பழனிசாமி

    • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து தங்கினார்.

    பின்னர் இன்று காலை 9 மணியளவில் திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான செங்கிப்பட்டி பகுதியில் திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வல்லம் பிரிவு சாலைக்கு சென்றார். அங்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு முடிந்த பின்னர் அங்குள்ள 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க கொடியேற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-


    தமிழ்நாட்டிற்கு குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் எண்ணற்ற பலவளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். காவரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம். நாம் ஆட்சியில் இருந்த வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நீர்வள மேம்பாடு சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரத்தநாடு சென்ற அவருக்கு ஒரத்தநாடு தொகுதி சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் தாரை தப்பட்டத்துடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்புக்கு பின்னர் பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார். பட்டுக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாவட்ட செயலாளருமான சி.வி.சேகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மதுக்கூர் துரை செந்திலின் அண்ணன் ஆதிமுத்து வள்ளாள தேவர் உருவப் படத்தினை திறந்து வைத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநல்லூரியில் தமிழ்நாடு பாடநூல் வாரிய முன்னாள் தலைவர் தங்கமுத்து, விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரின் தாயார் மறைந்த சொர்ணத்தம்மாள் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    பின்னர் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதையடுத்து மாலையில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து மாலை 6 அளவில் திருச்சிக்கு காரில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை மாவட்ட வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர், கொடி கம்பங்கள், ஆர்ச்சுகள், பிரமாண்ட கட் அவுட்கள், தோரணைகள் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி வருகையால் தஞ்சை மாவட்டம் விழாக்கோலம் பூண்டது.

    Next Story
    ×