search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியில் இன்றுடன் தைப்பூச திருவிழா நிறைவு: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பழனியில் இன்றுடன் தைப்பூச திருவிழா நிறைவு: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

    • கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
    • 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.

    அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

    Next Story
    ×