என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிளாம்பாக்கத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சியில் தான்
    • வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதிகாலையில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

    * தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே இறக்கி விட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    * கிளாம்பாக்கத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சியில் தான்.

    * பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது திமுக அரசு.

    * பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் யாரும் புகார் கூறவில்லை. பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர்.

    * அதிமுக ஆட்சியில் 30 சதவீத பணிகள் தான் நிறைவு பெற்றிருந்தது.

    * கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்து எண்ணிக்கை குறைவு என்பது தவறான குற்றச்சாட்டு.

    * வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    * கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் போதுமான பேருந்து வசதிகள் உள்ளன.

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

    * செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.
    • பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம்:

    ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருப்பூர் -கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

    கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.
    • பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    அதே நேரம் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் திரைமறைவில் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    கூட்டணி பேச்சு ஒருபுறம் நடந்தாலும் பா.ஜனதா தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தாலும் அதையும் சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சமீபத்தில் கோவையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதையெல்லாம் கடந்து பா.ஜனதா 15 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

    ஏற்கனவே பி.எல். சந்தோஷ் தேர்தலை சந்திப்பதற்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுத்து கொடுத்து உள்ளார்.


    அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற அளவிலான நிர்வாக குழுக்களும், பாராளுமன்றத் தேர்தல் பணிக்குழு, முழுமையான பூத் கமிட்டி அமைத்தல், பக்க பிரமுகர்களை நியமித்தல், ஒவ்வொரு பூத்திலும் 10 முக்கிய பிரமுகர்களை இணைப்பது பஞ்சாயத்து அளவில் போட்டியிட்டவர்கள், பிரபலங்கள், சமூக, ஆன்மீக முக்கியஸ்தர்களை கட்சியில் இணைத்தல், மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பூத் அளவில் வாட்ஸ் அப் குழுக்களை வலிமைபடுத்துதல், குறிப்பிட்ட குழுவினரை மனதில் கொண்டு அவர்களுக்காக பிரசார யுக்திகளை வகுப்பது, அரங்க கூட்டங்கள் நடத்துவது, வாக்காளர்களின் மனதை கவரும் வகையில் விளம்பரங்களை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மூலம் வெளியிட வேண்டும்.

    கட்சியின் பல்வேறு நிலைகளிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், கடை நிலையில் இருக்கும் பூத்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    ஒவ்வொரு பூத்திலும் கடந்த தேர்தல்களைவிட 10 சதவீத வாக்குகளை அதிகரித்தல், சாதி, தொழில் வயது வாரியான மற்றும் நடுநிலை வாக்காளர்களை தொடர்ந்து சந்திப்பது, எதிர்ப்புகளை திறம்பட சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் கட்சியின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து இதுவரை நடந்த பணிகள் பற்றி மதிப்பிடவும், தொகுதியின் நிலவரங்கள் பற்றி நேரில் கேட்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது.


    இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்பட 256 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    டெல்லியில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்று நிலவரங்களை கேட்கிறார்கள். இதுவரை செய்து முடித்துள்ள பணிகள் தொடர்பாக தொகுதி வாரியாக கேட்டறிவார்கள்.

    அதை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை கேட்டறிகிறார்.

    பின்னர் அவற்றின் அடிப்படையில் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக விளக்கம் அளிப்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    • அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன்.
    • கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் காலமானார். நந்தனம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயகுமார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் என்.ஜெயகுமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் அவர்கள் மறைந்த செய்தி வந்தடைந்து என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது.

    அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும் வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன். தலைமைக் கழகம் அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே தலைமைக் கழகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார். அறிவகத்தில் தொடங்கிய பயணம் அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம் எனத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் என உச்சம் பெற்றது. தலைமைக் கழகத்தை நாடி வந்த ஒவ்வொரு உடன்பிறப்பும் அன்போடும் உரிமையோடும் உறவாடி 'அறிவாலயம்' ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர்.

    அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தேன்; அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன்; அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன்; அவரது குடும்பத்தில் ஒருவனாய் இருந்தேன். உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    அறிவாலயம் ஜெயக்குமார் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
    • நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    மத்தூர்:

    தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் சேரலாதன் தலைமையில் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் செயல்படும் நம்பிக்கை மையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தாவது:-

    எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசி அல்லது முற்றிலும் குணப்படுத்த கூடிய மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உயிரிழப்பு ஏற்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்ஐவி தொற்றில்லா குழந்தைகளை பெறமுடியும்.

    தமிழகத்தில் தற்பொழுது 1.40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.
    • வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பூண்டியையொட்டி அமை ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் 7-வது மலை உச்சியில் தென்கயிலை என போற்றப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் ஆண்டுதோறும் கோடை க்காலம் தொடங்கியதும் கூட்டமாக வந்திருந்து படிப்படியாக மலையேறி சென்று, பின்னர் மலைஉச்சியில் வீற்றிருக்கும் சுவாமியை தரிசனம் செய்து செல்வதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு சிவபக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி செல்தற்காக பூண்டி மலைஅடிவாரத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை வனத்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். மேலும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல அனுமதி மறுத்து ஊருக்குள் மறுபடியும் திருப்பி அனுப்பினர். இது மலையேற ஆர்வமாக வந்திருந்த பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது. தொட ர்ந்து அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே சரவணம்பட்டியை சேர்ந்த நாக ராஜன் என்பவர் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா, ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண் டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.

    தொடர்ந்து மலையேற்றத்துக்காக வந்திருந்த பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று சோதனைக்கு உட்ப டுத்தினர். அப்போது ஒரு சிலரிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவுப்பொருட்களை பேப்பரில் மடித்து பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு மலையேற வசதியாக நீண்ட கம்புகள் வழங்கப்பட்டன.

    வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்-கூட்டமாக செல்ல வேண் டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பக்தர்கள் கூட்ட மாக மலையேறி வருகின்ற னர். மேலும் பக்தர்கள் செல்லும்வழியில் பாது காப்பு மற்றும் ரோந்து ப்பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டு உள்ளன. மார்ச் 8-ந்தேதி மகாசிவராத்திரி வருவதால் அன்றைய தினம் பக்தர்கள் அதிகளவில் திரண்டுவருவர் என்பதால், மலையேற்ற பகுதியில் பாது காப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டு உள்ளன.

    மேலும் வெள்ளியங்கரி மலைக்கு வரும் பக்தர்களை பாதுகாப்புடன் வழிநடத்தும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக தன்னார்வலர்களை ஏற்பாடு செய்யும் பணியும் நடக்கிறது. இதுதவிர மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கண்காணிப்பு கூரை அமைத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் வனத்துறை சார்பில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வந்திருக்கும் பக்தர்கள் தேநீர் அருந்தவும், சாப்பாடு வாங்கி செல்லவும் ஏதுவாக, வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    உடல் நலக்குறைவால் பால்பாண்டி நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்து வந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே புதுக்கோட்டை அருகே காவேரி நகரில் இருந்து முத்துக்காடு ஊராட்சிக்கு செல்லும் சாலையில் 2 இடங்களில் இறையூர் பகுதி மக்கள் சார்பில் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பே னர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரசு வஞ்சிப்பதாகவும், அதனால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வெள்ளனூர் போலீசார் விரைந்து சென்று பேனர்களை அகற்றினர்.

    • நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
    • நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

    ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×