என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கூட்டத்துக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் தொண்டர்களை திரட்ட பாரதிய ஜனதா ஏற்பாடுகளை செய்து வருகிறது.
- இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
மாநிலம் வாரியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டுப்பதிவுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் வருகிற 24, 25-ந்தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு பணிகள் முடிந்த பிறகு இந்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு பணிகள் நீடித்தால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும். நாடு முழுவதும் 6 முதல் 8 கட்டங்கள் வரை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடித்து விட்டு பிரசாரத்தை தொடங்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி விட்டார். நேற்று அவர் அரியானா மாநிலத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அடுத்த கட்டமாக திங்கட்கிழமை காஷ்மீர் மாநிலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வர உள்ளார். வருகிற 26-ந்தேதி முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு பிரதமர் மோடி தென் மாநிலங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அவரது சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
தென் மாநிலங்கள் சுற்றுப்பயணத்தின் போது தமிழகத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி 25-ந்தேதி பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரள மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதை முடித்துக் கொண்டு அன்றே தமிழகம் வருகிறார். அன்று பல்லடத்தில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேச உள்ளார்.

அந்த கூட்டத்துக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் தொண்டர்களை திரட்ட பாரதிய ஜனதா ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஒரு கட்சி நிகழ்ச்சியிலும், ஒரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். பல்லடத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியை மற்றொரு ஊரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
28-ந்தேதி அந்த நிகழ்ச்சி நடைபெறும். நெல்லை அல்லது தூத்துக்குடியில் அந்த அரசு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றுக்கான நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வது உறுதியாகி உள்ள நிலையில் அவரது வருகை 26 மற்றும் 27-ந்தேதிகளில் இருக்கலாம் அல்லது 27 மற்றும் 28-ந் தேதிகளில் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால் இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 8742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பேரில் போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இளம் பருவத்தில் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3429 பெண்கள் இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஆகி உள்ளனர்.
இதன் மூலம் இந்த வேதனை பட்டியலில் தர்மபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் 1057 இளம்பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.
சிவகங்கையில் 439 பேர், திருச்சியில் 349 பெண்கள், நெல்லையில் 347 பேர், மதுரையில் 260 பேர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தூத்துக்குடியில் 162 பெண்களும், தேனியில் 104 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், கன்னியாகுமரியில் 73 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் 3 ஆண்டில் 72 பெண்களும், தஞ்சாவூரில் 70 பெண்களும், புதுக்கோட்டையில் 33 பெண்களும் இளம் வயதிலேயே கர்ப்பமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மூலமாக 905 இளம்பெண்கள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருப்பது போல கஸ்தூரிபா ஆஸ்பத்திரி அளித்த தகவலில் 230 பேரும், தாய்-சேய் மருத்துவமனை தகவலில் 92 பேரும் கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் 3 ஆண்டில் அறியா பருவத்தில் கர்ப்பமான இளம்பெண்களின் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த பாதிப்புகள் பட்டியலில் தர்மபுரிக்கு அடுத்து 2-வது இடத்தில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி வாலிபர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படி அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இருப்பினும் இதுபோன்ற இளம் வயது கர்ப்பங்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
- போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை-சாலை அண்ணாமலை மில்ஸ் ரோட்டில் எஸ்.ஆர். நகரில் உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 வருடத்திற்கு முன்பு அணுகியுள்ளார்.
அப்போது மகளிர் குழு லோன் மற்றும் வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல்,தேனி ஆகிய பகுதிகளில் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் நடத்தியதும், இதே போல் பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.சத்திய பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவு படியும், டி.எஸ்.பி. குப்புசாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்போன் டவரை வைத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே செல்வராஜ் பதுங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி கூறுகையில்,
திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் எர்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.
- சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.
* உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
* முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 78 ரூபாயாகவும் பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் குறைந்த நிலையில் நேற்றும் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும் சவரன் ரூ.46,240-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 78 ரூபாயாகவும் பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
- செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
- காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.
சென்னை:
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி சார்பாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோடு, தேரடி அருகில், மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.
இக்கூட்டத்தில், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
- ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
- மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
நெல்லை:
'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.
மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
- பொதுமக்கள் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம்.
சென்னை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 14-ந் தேதி பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி பிரதீப் என்ற 5-ம் வகுப்பு மாணவன் பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6,754 பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.
பள்ளி மாணவ-மாணவிகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலைவிதிகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்பதையும் விசாரித்து அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கோ அல்லது வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் பொதுமக்களும் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு விரிவான வழிமுறைகளை கொடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் துறையின் மூலம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தற்போது சுங்கச்சாவடி பணிகள் முடிவுற்று தற்போது சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, துவாக்குடியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி அருகருகே 2 சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 2021-ம் ஆண்டு அன்று முன்னாள் எம்.பி. குமார் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி பணிகள் முடிவுற்று தற்போது சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசையும் கண்டித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில், 23-ந்தேதி மாலை 5 மணிக்கு, துவாக்குடி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெறும். இதில், அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
- போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:
உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.
போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.
கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...
கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..
போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
- நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்.
- அப்போது, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.
நெல்லை:
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.எல்.ஏ. அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.
பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார். உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளிக் கொடுக்கும் அவர்கள் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.






