என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
- தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு கடந்த 6-ந்தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகிதத்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினைமேற்கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் கடந்த 11-ந்தேதி 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை மருத்துவணியாளர் தேர்வாணையம் முடித்து பொது சுகாதாரத் துறைக்கு பட்டியல் அனுப்பியது. இந்த துறையில் கடந்த 3 நிகழ்வுகளாக இந்தியாவிலேயே முதல்முறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிநியன ஆணைகள் வழங்கப்பட்டது.
தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். பணி ஆணைகளை பெறும்போது அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணி ஆணை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5,100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் செய்துக் கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் அவர்கள் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார். 5,100 பணியிடங்களும் ஒரு மாத காலத்திற்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணி ஆணை பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை அதே இடத்தில் தான் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் 2 நாட்களாக பெரும் சர்ச்சையாக வெடித்தது. குஷ்பு, சேரன், காயத்ரி ரகுராம் உள்பட பல திரை உலக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிஷாவும், ராஜுவுக்கு கண்டன கருத்துக்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை திரிஷா சார்பில் ஏ.வி. ராஜுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் என் மீது கூறப்பட்ட கருத்துக்களுக்கு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறினால் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
- சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.
அரியலூர்:
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.
சென்னை:
தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். "காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே" என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
* உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.
* காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
- 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை எதையும் கட்டுப்படுத்த அரசு தயாரில்லை. அதற்கு மாறாக விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை நசுக்கி வருகிறது.
அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.

சி.ஏ.ஜி.யை முடக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக எந்த அறிக்கையும் வருவதில்லை. விவசாயிகள் தற்கொலை பற்றி எந்த அறிக்கையும் தரவில்லை. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக மோடி முடக்கி வைத்துள்ளார். இது ஜனநாயக நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.
அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.
முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
- மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
- பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கூறியதாவது:
* காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது.
* காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது.
* மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:
* மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.
* நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
* ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை.
* தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது.
* கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
* தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
* மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
* மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
* மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
* கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.
* மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
* தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது.
* பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.
* மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை.
* மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது.
* மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.
- வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.
கோவை:
கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த நடனத்தை இப்போது பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நடனத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள் என ஏராளமா னோர் உற்சாகத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கோவில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வள்ளி கும்மி நடனம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வள்ளி கும்மி நடனம் ஆடுவது கவருவதாக அமைந்துள்ளது. வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மங்கை வள்ளி கும்மி நடனக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் முன்பு தங்கள் பாரம்பரிய வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றி அங்கு திரண்டு இருந்த வடமாநில பக்தர்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாங்களும் இந்த கலையை கற்க விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மங்கை வள்ளிக்கும்மி குழுவின் தலைமை பயிற்சியாளரான பொங்கலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறியதாவது:-
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 477 பேருடன் ரெயில் மூலம் அயோத்தி சென்றோம். அயோத்தி ராமபிரான் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வெகுவாக கண்டு ரசித்தனர். நடனம் நிறைவு பெற்றதும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர், எங்களுக்கும் வள்ளி கும்மி கற்றுத் தாருங்கள் என்று மனம் திறந்து கேட்டனர். வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
பண்டைய காலம் முதலே கும்மி ஆட்டம் என்பது அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்துக்கு கும்மி கொட்டுதல், அதாவது கை கொட்டுதல் என்று பொருள். இது தற்போது காலமாற்றத்துக்கு ஏற்ப மெல்ல நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், கைக்கொட்டி அடித்தல், இணையுடன் சேர்ந்து கைகளை கொட்டுதல் என்று 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் மாரியம்மன், முருகன் கோவில் திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்து கும்மி அடிப்பது வழக்கத்தில் உள்ளது. அதாவது முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன்பாக 6 நாளும், கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடுவோம். அப்போது பல்வேறு கருத்துக்கள் செறிந்த பாடலைப் பாடி கும்மியடித்து ஊர் மக்கள் முன்னிலையில் பண்டைய கால பழக்கவழக்கங்களை நினைவு கூறுவோம்.
எங்களின் வள்ளி கும்மி குழுவில் பெரும்பாலும் நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் பாடப்படுவது உண்டு. அகநானூறு, சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் பூந்தட்டு, குலவை, தீபம், கதிர், முளைப்பாரி என கும்மியில் பல்வேறு வகைகள் உண்டு. இதற்கான இலக்கியங்களும் சாத்திரங்களில் நடைமுறையில் உள்ளன. அவற்றில் வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.
கும்மி என்பது உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வு அளிக்கும் சிறந்த கலை ஆகும். வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கு மருந்து, மாத்திரை இன்றி உடலில் நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் குறைந்து உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்புகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2.5 மணி நேரம் ஆகும். கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி த்தொகை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
- ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
- கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
- நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.
தூத்துக்குடி:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது முறையாக 2024-ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அந்தந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே அங்கு முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதற்காக 28-ந் தேதி காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட், செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சிறுகுறு மற்றும் நானோ வகையில் எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக மத்திய அரசு புதிதாக ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.
அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
மேலும் தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் ரமேஸ்வரன் பாம்பன் கடலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே தூக்குப்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தூத்துக்குடி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கூடுதலாக தென்மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தூத்துக்குடி அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அதனை முடித்துக்கொண்டு நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.
- அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
'கல்வி மட்டுமே சமத்துவம் மலர்ச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற கலைஞரின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி உள்ளார். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.
தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 22 ஆயிரத்து 931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார்.
- நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன.
இந்த 2 அணிகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி புதிய கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது.
தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ப்பதற்கும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பா.ஜனதா கூட்டணி இறுதி செய்யப்பட இருக்கிறது.
மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிர களப்பணியில் இறங்கி உள்ளது.
வடமாநிலங்களில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்த முறை தென் மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அந்த கட்சி உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறி வைத்து பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது வருகிற 27-ந்தேதி இரவு பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார். இதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வைத்து பா.ஜனதா தமிழக தலைவர்கள் மற்றும் டெல்லியில் இருந்து வருகை தரும் மேலிட தலைவர்கள் ஆகியோருடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை முக்கிய பிரமுகர்கள் பலரும், கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர்.
பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகை தருகிறார்.
பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.

பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 3.50 மணிக்கு பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார். அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது அவர்களுடனும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.
மறுநாள் 28-ந் தேதி காலை 8.15 மணிக்கு பிரதமர் ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார்.
8.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 9 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் சில திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகள் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.
விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார்.
நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் வருகையால் தமிழக பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். நெல்லை மற்றும் பல்லடத்தில் பிரதமர் பேச உள்ள பொதுக்கூட்டங்களில் லட்சக்கணக்கானோரை திரட்டி பலத்தை காட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிரதமரின் தமிழக சுற்றுப் பயணத்தால் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
- ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
- மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.
சேலம்:
சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-
திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும்.
ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு ஈரோட்டை அடையும்.
நாளை (23-ந் தேதி) தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இயக்கம் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறதது. மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.
நாளை (23-ந் தேதி) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 24-ந் தேதி தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் வருகிற 26-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் புறப்படும்.
வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






