search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்னும் ஒரு மாதத்தில் 5,100 மருத்துவ துறை ஊழியர் பணியிடம் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    இன்னும் ஒரு மாதத்தில் 5,100 மருத்துவ துறை ஊழியர் பணியிடம் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
    • தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு கடந்த 6-ந்தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகிதத்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினைமேற்கொண்டிருக்கிறார்கள்.


    அதே போல் கடந்த 11-ந்தேதி 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை மருத்துவணியாளர் தேர்வாணையம் முடித்து பொது சுகாதாரத் துறைக்கு பட்டியல் அனுப்பியது. இந்த துறையில் கடந்த 3 நிகழ்வுகளாக இந்தியாவிலேயே முதல்முறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிநியன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். பணி ஆணைகளை பெறும்போது அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணி ஆணை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5,100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் செய்துக் கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் அவர்கள் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார். 5,100 பணியிடங்களும் ஒரு மாத காலத்திற்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணி ஆணை பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை அதே இடத்தில் தான் பணிபுரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×