என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
    • நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள். இங்கிருந்து யாரும் வெளியே போக மாட்டார்கள்.

    சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

    அந்த வகையில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக உயர்ந்து, கட்சியின் பொது செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

    சமூக வலைதளங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர், பா.ஜ.கவுக்கு செல்வதாக தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு சேர்ந்து கொண்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். அதனையெல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. அதனை பற்றி பேசினால் நமக்கு தான் நேரம் விரயமாகும்.

    வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் வைத்துள்ள பா.ஜ.கவில் நாம் சேரப் போகிறோம் என்று கூறினால் அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.

    தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஒன்று சேருமா? பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்று சேருமா? அது போல தான் நம்மை பற்றி பரப்பப்படும் வதந்தியும். அதனால் அதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள்.

    நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,கே.ஆர்.ஜெயராமன், சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.
    • எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    * இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

    * நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை.

    * பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.

    * திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.

    * குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.

    * குலசை ராக்கெட் ஏவுதளம் தொடர்ந்து எங்களால் வலியுறுத்தப்பட்டு, அமைக்கப்பட்டுள்ளது.

    * எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    * முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

    * அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.

    * தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர் என்று அவர் கூறினார்.

    • மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
    • கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அடுத்ததாக கூட்டணி கட்சியினரை எந்தெந்த தேதிகளில் பேச்சு வார்த்தைக்கு அறிவாலயத்துக்கு அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    • குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
    • வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.

    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

    இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ராக்கெட் இன்று குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது 'ஆர்.எச்.200' என்று அழைக்கப்படும் 'சவுண்டிங்' ராக்கெட்டாகும்.

    இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை வேகம், ஒலியெழுப்பும் ராக்கெட்டுகளின் வளர்ச்சி, ராக்கெட்டுகளில் உயிர்வாழ்வு உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

    குலசேகரன்பட்டினம் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்த தரவுகளை அறிந்து கொள்வதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு, வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.

    • பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
    • தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.

    * பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    * 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    * உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    * இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.

    * மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.

    * நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    * பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.

    * அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    * காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.

    * தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    * தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.

    * கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    * மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.

    * மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.

    * தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.

    * வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.

    * நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.

    * நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    * வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

    * விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
    • அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

    கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25ம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை "ஆ" கிராமம். பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02 2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா வயது 13) த/பெ முத்துக்குமார் மற்றும் செல்வி தர்ஷினி வயது 13] த/பெ இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

    உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
    • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:

    * அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.

    * அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

    * தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.

    * பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.

    * தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    * உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.

    * தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    * பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

    * மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.

    * நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

    * உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

    * இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது என்று கூறினார்.

    • தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
    • 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர அரசு ஏற்கனவே சிறிதும், பெரிதுமாக இதுவரை 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது. மேலும் தற்போது 23 வது தடுப்பணை கட்டுவதற்கு ரூ 215 கோடி ஒதுக்கி அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து, ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ள செய்தி பேரதிர்ச்சியை தருகிறது. பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப்பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த எதேச்சதிகார முடிவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.


    அனைத்து நதிகளுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கையில் உள்ளதால் பிரதமர் மோடி உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. தமிழக அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஆந்திர முதல்வரிடம் உடனடியாக பேசி தமிழக வட மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தையும், நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூ சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டும், தன்னைப் பற்றி மேலும் அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வெங்கடாசலம் குறித்து அவதூறாக பேசவும் அவருக்கு இடைக்கால தடை விதித்தார்.

    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    பவானி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபட வீடு அருகே உள்ள செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாதீன் (வயது 65). இவரது மனைவி சுபைதா (62), பேரன் அபுதாகிர் (9), பேத்தி ஆஷிகா (13) ஆகிய 4 பேரும் ஊட்டி செல்வதற்காக நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.

    காரை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் (34) என்பவர் ஒட்டி வந்தார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் பவிஸ் பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அதிகாலை என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்தப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது கார் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. காரில் இருந்த அனைவரும் அலறினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கமாதீன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் சுபைதா, ஆஷிகா, அபுதாகிர், டிரைவர் நவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுதாகீர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    • நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    நெல்லை:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அங்கிருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.

    மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு தொண்டர்கள் அவரை வரவேற்றனர். நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×