search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kanyakumari sea"

  • இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்
  • மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்

  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம். அகஸ்தீஸ்வரம் வட்டம் இராஜாக்கமங்கலம் கிராமம் மெமூர் கடற்கரையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது. கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24)ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

  மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யயும் உத்தரவிட்டிருக்கிறேன்.

  இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
  • கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

  நாகர்கோவில்:

  திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

  நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

  கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

  அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
  • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

  இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

  இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

  • உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
  • அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

  கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25ம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை "ஆ" கிராமம். பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02 2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா வயது 13) த/பெ முத்துக்குமார் மற்றும் செல்வி தர்ஷினி வயது 13] த/பெ இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

  உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

  • கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன.
  • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3 கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

  வழக்கம்போல இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தீபாவளி பண்டிகை காரணமாக குறைவான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி தூரத்துக்கு கடல் "திடீர்" என்று உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

  இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன. வழக்கமாக சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் உள்வாங்கி இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போடுவதற்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.

  சில இடங்களில் முட்டளவு தண்ணீரும், சில இடங்களில் கரண்டை கால் அளவுக்கு மட்டுமே கடலில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதற்கு அச்சம் அடைந்தனர். அதையும் மீறி கடலில் இறங்கி நின்ற சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.

  ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

  இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இருப்பினும் வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் வழக்கம்போல் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்களும் அதிக அளவில் மீன்களை பிடித்துக் கொண்டு வந்தனர்.

  • கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்து வருகிறார்கள்.
  • நெல்லை குமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

  கன்னியாகுமரி:

  கடல் வழியாக படகு மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் "சீ விஜில்" என்ற பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள்.

  அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு அதிநவீன ரோந்து படகில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் ஒரு குழுவினர் கூடங்குளம் கடல் பகுதி வரைக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

  அதேபோல இன்னொரு அதிநவீன ரோந்து படகில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி மாவட்டத்தில் உள்ள 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்து வருகிறார்கள். நெல்லை குமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ந்து நடக்கிறது.

  மழை நீடிப்பதால் பகவதி அம்மன் கோவில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது.
  கன்னியாகுமரி:

  சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்கின்றன. கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வு, கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, அலையே இல்லாமல் கடல் குளம் போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது ஒன்று நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

  அதேபோல கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடலிலும் இந்த காலை மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரி கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்று 2-வது நாளாகவும் கன்னியாகுமரி கடல் நீர் மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

  இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் தண்ணீரின்றி வெளியே தெரிந்தன. கடலில் அலையும் இல்லாமல் குளம் போல் காட்சி அளித்தது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு தயங்கினர். இதனால் இன்று காலை கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்த சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகளை கரைக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

  கன்னியாகுமரி பகுதியில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  இதனால் கடந்த 2 நாட்களாக வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிப்பதால் சூரிய வெளிச்சத்தைக் காண முடியவில்லை. இந்த மழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை சுற்றிபார்க்கமுடியாமல் தாங்கள் தங்கிஇருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளில் இருந்து வெளியேவரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை, கடற்கரைப்பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

  தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்த தொடர் மழையினால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், வட்டக்கோட்டை பீச், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, நீர் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரைச் சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அமைந்து உள்ள சுனாமி நினைவு பூங்கா, உள்பட அனைத்து பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

  இந்த மழை நீடிப்பதால் பகவதி அம்மன் கோவில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது. இந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

  கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் மழையினால் பக்தர்களின் வருகை குறைந்து உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.  ×