என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
- ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.
நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.
தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 23-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 மற்றும் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது.
- விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.
அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார்.
பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது.
இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது.
ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.
தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.
கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.
பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கணுவாய்-ஆனைகட்டி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
காருக்குள் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.
மொத்தம் 28 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது40) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 28 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் சாலையில் குபேரபுரி என்ற இடத்தில் மாநில வரி அலுவலர் மார்ஷல் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 270 வைத்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது, காய்கறி வியாபாரம் பார்த்து வருவதாகவும், அதில் கிடைத்த பணத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பேரூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு 5.52 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
- கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
- பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் நாளைக்குள் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாக உள்ளது. அன்றைய தினம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை தேர்தல் அறிக்கை அன்று வெளியாகாவிட்டால் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார தொடக்க விழா மேடையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
தே.மு.தி.க. தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
- 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.
மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.
24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.
மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
- கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
- வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
முதலில் இந்த பட்டியல் போலியானது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர் பட்டியல் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
1 தென்சென்னை-தமிழிசை சவுந்தரராஜன், 2 கோவை-ஏ.பி.முருகானந்தம், 3 கரூர்- அண்ணாமலை குப்புசாமி, 4 திருச்சி-ஆசீர்வாதம் ஆசாரி, 5 கோவை-தடா பெரியசாமி, 6 சிவகங்கை-எம்.சத்தியானந்தன், 7 ராமநாதபுரம்-எம்.முருகானந்தம், 8 தூத்துக்குடி-ராதிகா சரத்குமார், 9 தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, 10 திருநெல்வேலி-நைனார் பாலாஜி, 11 கன்னியாகுமரி-விஜயதாரணி.
- சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு திரவுபதி அம்மன் கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது
- பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை அறநிலையத்துறை நியமிக்க வேண்டும் என் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார். கோயில் திறக்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை போதுமான பாதுகாப்பது ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இவ்வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.
- இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
- இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
சென்னை:
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் 'இந்தியா' கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 பாராளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 பாராளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில், "நாற்பதும் நமதே! நாடும் நமதே!" என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.






