search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல் - சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக்
    X

    கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல் - சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக்

    • அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.

    பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.

    இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×