என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம்.
- சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்.
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம்.
ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன்.
சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன்.
பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை" என்றார்.
- நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் வருகிற 29-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும் இயக்கப்படுகின்றன.
அதே போல ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவிற்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
- திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.
திருச்சி:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.
- தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.
23-ந்தேதி தஞ்சை, நாகையிலும், 25-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரியிலும், நேற்று (26-ந்தேதி) தூத்துக்குடியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேசினார். தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்தார்.
மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

இதில் தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு களம் காணும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேச உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பாராளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தென்காசி சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நட்டு, தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிரசார கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று பின்னர் விமானத்தில் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். அதே போல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகளும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்படும். அத்துடன் இன்று முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
- 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிரேமலதாவின் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளது. 5 பாராளுமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரேமலதாவின் சுற்றுப் பயண திட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டது. பிரேமலதா எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஊர்களில் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் வருமாறு:-
29-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, 30-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 31-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், 1-ந்தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி.
2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், 3 மற்றும் 4-ந் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 5 மற்றும் 6-ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, 7 மற்றும் 8-ந் தேதி கடலூர்.
9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கடைசி 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பிரேமலதா பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.
- தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தலைவர்கள் பிரசாரத்துக்கு 21 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
- அநேகமாக பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருவார் என்று தெரிகிறது.
சென்னை:
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் சுற்றுப்பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தலைவர்கள் பிரசாரத்துக்கு 21 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அந்த காலக்கட்டத்தில் பிரதமர் மோடி 3 தடவை வர வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒரு தடவை வர மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர் 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. கரூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 3 நகரங்களுக்கு பிரதமர் மோடி செல்லக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
அநேகமாக பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருவார் என்று தெரிகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திலும் அவர் 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கேற்ப அவரது தமிழக சுற்றுப் பயணம் அமையும்.
வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 2-வது வாரமும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு மீண்டும் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
- கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.
- டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
விருத்தாசலம்:
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24-ந் தேதி இரவு வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், தனது செல்போனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாா்த்தபடி தனியார் பஸ்சை ஓட்டினார். அவரது அலட்சியத்தால் பஸ் விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
டிரைவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியதை சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறுகையில். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, செல்போனில் வேறு ஏதேனும் பார்க்கக்கூடாது என்று ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.
இதையும் மீறி யாரேனும் செல்போன் பார்த்தபடியோ அல்லது செல்போனில் பேசியபடியோ வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 13 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 18 கன அடியாக நீர் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நீர் வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
- வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 19-ந்தேதி சவரன் ரூ.49,080-க்கு விற்பனையானது. அதன் பின் சவரன் ரூ.49ஆயிரத்திற்கு மேலேயே விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று சவரன் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,215-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்கப்படுகிறது.
- இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
- ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு மலை கிராமங்களில் தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவை குதிரை, கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.
தேனி மாவட்டம் போடி குரங்கனி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. காரிப்பட்டி மற்றும் ராசிமலை கிராமம். கேரளாவுக்கு நிகராக இப்பகுதியில் ஏலக்காய், காப்பி, மிளகு போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மேம்பட்டு வரும் நிலையில் நிலவில் சந்திராயன் தரையிறங்கிய நிலையிலும் கூட இதுபோன்ற மலை கிராமங்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பகுதிகளில் மின்சார வசதி கிடையாது. ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.
தற்போது இந்த கிராமங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்த கிராமங்களுக்கு முதல்நாளே குதிரைகளை தயார்படுத்தி எடுத்துச்செல்ல வேண்டும். அதேபோல தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் முதல்நாளே அங்கு சென்று இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் இதுபோன்ற சிரமத்தை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களான அடுக்கம், வெள்ளக்கவி உள்ளிட்ட பல கிராமங்களிலும் சாலைவசதி இல்லாததால் தற்போது வரை குதிரைகள் மூலமே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சியினரிடம் மலைகிராம மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனையான சாலை, குடிநீர் வசதிகளையாவது செய்து தரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.
சிவகங்கை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை மட்டும் மாவட்டத்தில் ரூ.24½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, சிவகங்கை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால், நேற்று (26.03.2024) வரை ரொக்கம் ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.
செங்கல்பட்டு:
சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.






