என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.
- 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.
கோவை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
* கோவை மக்களின் அன்போடு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
* 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.
* தொகுதி மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
* எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் என்று கூறினார்.
- அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
- எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
கரூர்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 945 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்துக்கு 55 உரிய ஆவணங்கள் காட்டியதால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 890 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினரால் பெரும்பாலும் கைப்பற்றப்பட்ட பணம் வியாபாரிகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
- கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரியஜெனிபர் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (28-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
நாளை காலை 9 மணிக்கு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனையில், அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு அழகிய மண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
11 மணிக்கு திங்கள்நகரிலும், 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் அவர் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் சின்னம் போல் எனக்கும் கிடைத்து இருக்கும். தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை.
சின்னத்தில் விவசாயம் இல்லை என்றால் என்ன நான் எப்போதும் விவசாயி தான். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்திலேயே போட்டியிடுவதற்காக கடைசி நொடி வரையும் போராடினோம். அது கிடைக்காததால் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள மைக் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அம்பேத்கர், காமராஜர், அண்ணா மற்றும் உலக தலைவர்களான ஸ்டாலின், பெடல் காஸ்ட்ரோ என பல மேதைகளை இந்த "மைக்"கே உருவாக்கி இருக்கிறது.
எனவே மக்கள் மத்தியில் இந்த சின்னத்தை கொண்டு சேர்த்து அந்த மேதைகளை போல நாங்களும் தேர்தலில் புரட்சி செய்வோம்.
எந்த சூழலிலும் யாருட னும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரபாகரனின் மகனான நான் இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். 7 சதவீத ஓட்டுகளை வாங்கியதற்கே எங்கள் மீது இவ்வளவு பயமா? வரும் காலங்களில் எப்படி வருகிறோம் பாருங்கள்.
பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு எங்களுக்கு தேசிய விலங்கான புலி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோர உள்ளோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும். இல்லையென்றால் எண்களில் களம் இறங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பலம் என்ன என்பது தெரிய வரும்.
பா.ஜனதா களம் இறங்கும் தொகுதிகளில் தி.மு.க. வலுவான போட்டியை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். அதில் தேர்தலில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தலில் சின்னம் இருக்க கூடாது, வாக்கு எந்திரங்களுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
- தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
- அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
- நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார்.
மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பசியாற்றும் பணியினை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த நெல்லை பாலு.
மதுரைத் தெருக்களில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையின் அட்சயப் பாத்திரம் என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, கடந்த 1050 நாட்களுக்கு மேலாக அறுசுவை மதிய உணவை உயர்தரத்துடன் வழங்கி வருகிறார் அட்சயப் பாத்திரத்தின் நிறுவனரான நெல்லைபாலு.
விடாது மழை பெய்தாலும், கடுமையான வெயில் காய்ந்தாலும் கூட மதிய உணவு வழங்குவதைத் தொடர்ந்து செய்து வருகிறார் இவர். தன்னலம் கருதாது இவர் ஆற்றிவரும் அன்னதானப் பணியின் அவசியத்தை உணர்ந்த பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைத் தந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
சேவையில் சிறந்த சேவை அன்னதானம். அதில் முழுமையாகப் பங்கெடுக்க முடியாதவர்கள் சில பங்களிப்புகளின் மூலம் உதவி செய்வது உன்னதமான பணி. அதில் விருப்பமுள்ள பலர் கலந்துகொள்கிறார்கள். அதனால் இந்தப் பணியை மேலும் மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டுகோலாக இருக்கிறது என்கிறார் பாலு .

நெல்லையில் பிறந்தாலும் மதுரையில் மையம்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி எனச் செயல்பட்டு வருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மகாகவி பாரதியின் மீதான பற்றால் பாரதி யுவ கேந்திரா என்கிற அமைப்பை ஏற்படுத்தி பார்வையற்ற 250 மாற்றுத்திறனாளிகளுக்குப் பல ஆண்டுகளாக மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கி வருகிறார்.
காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் பெயரால் அனுஷத்தின் அனுகிரகம் என்கிற புனித அமைப்பை நிறுவி ஆன்மிகம் தழைத்தோங்க அரிய பணிகளைச் செய்து வருகிறார்.
அதேபோல் மாதந்தோறும் அனுஷநட்சத்திர நாளில் ஸ்ரீமஹா பெரியவரின் அருமை பெருமைகளைக் கூற ஆன்றோர்களை அழைத்துவந்து சிறப்புச் சொற்பொழிவாற்றச் செய்து செவிக்கு விருந்து படைக்கிறார். அந்நாளில் ஸ்ரீமஹா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அனைவரும் அந்த மகானின் ஆசி பெற்று வாழ்வில் வளம் பெறச் செய்கிறார்.
மதுரையின் அட்சய பாத்திரத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க விரும்புகிறேன். அன்பர்களின் நல்லாதரவுக்காகக்

காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அட்சயப் பாத்திரம் நிறுவனர் நெல்லைபாலு.
செல்: 94426 30815 (G-pay).
MADURAIYIN ATCHAYA PAATHIRAM TRUST என்ற பெயரில் செக் அனுப்பிட வேண்டுகிறோம்.
அத்துடன் தங்களது முகவரி மற்றும் ஆதார், பான் ஜெராக்ஸ் அனுப்பிட வேண்டுகிறோம்.

- கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
- குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் எடப்பாடி பழனிசாமி தங்கி உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் பசலியான் நசரேத், ராணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., பார்வர்ட் பிளாக், புரட்சி பாரதம் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மதியமே தொண்டர்கள் வர தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் நாகராஜா திடலுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு சங்கரன்கோவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
- அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.
- அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும்.
சென்னை:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1½ லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயாராகி வருகிறார்கள்.
இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்ட திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக உளவு பிரிவு போலீசார், மாநில சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் ஆகியோர் மிகவும் உஷாராக செயல்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணிகளில் வேகம் காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் "ராமேசுவரம் கபே" ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான தகவல்கள் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த இருவரும் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டிய தகவலை அடுத்தே தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக உளவு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, தேர்தல் மற்றும் பண்டிகை காலங்களில் மத்திய அரசிடமிருந்து இதுபோன்ற எச்சரிக்கை தகவல்கள் எப்போதும் வருவது வழக்கம்தான். இருப்பினும் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கிறோம் என்றார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும். இதனால் தேர்தல் களம் இப்போது இருப்பதைவிட பரபரப்பாகவே காட்சி அளிக்கும்.
இதனை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
- கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவனந்தபுரம்:
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.
அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-
தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
- தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-
* சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
* தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
* மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.
* 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
* கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.
* குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
* மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.
* தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
* தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
* கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.
* அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.
* சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.
* நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.
* மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
* ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.
* பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.
* தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.
* தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.
* தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
* தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.
* திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.
* மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.
* பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.
* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






