என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வருகிற 5-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் வருகிற 5-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

    வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டம், மாலை 5.30 மணிக்கு தியாகதுருகம், கள்ளக்குறிச்சியிலும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர் ஆகிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
    • பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமினில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கடந்த 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊட்டி காபி ஹவுஸ்-ல் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்றிருந்தனர்.

    ஆனால் ஊட்டி காவல் துறையினர் வேண்டுமென்றே பல்வேறு தடுப்புகளைப் போட்டு அ.தி.மு.க.வினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தி உள்ளனர்.

    ஊர்வலம் செல்ல கால தாமதம் செய்ததை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.

    ஆனால், ஊட்டி காவல் துறையினர் அமைதியான முறையில் போராடிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து உள்ளனர். காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகளை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடமும், மாவட்டத் தேர்தல் அலுவலரான, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் நேற்று (26-ந் தேதி) புகாராக தெரிவித்துள்ளனர்.

    ஆளும் தி.மு.க.-வின் தாளத்திற்கு ஏற்ப, ஊட்டி டவுன் காவல்துறையினர் கடந்த 25-ந் தேதி அன்றே நீலகிரி மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி டி.வினோத் உள்ளிட்ட பெயர் குறிப்பிடாமல் 20 அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது, பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமினில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    உரிய அனுமதி பெற்றும், 11 மணி முதல் 12.30 மணி வரை அ.தி.மு.க. தொண்டர்களை ஊர்வலம் நடத்த அனுமதிதராமல், ஆளும் தி.மு.க. வினரை திருப்தி படுத்த, அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள ஊட்டி காவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று ஊரிசு கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    வேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    கல்லூரி பயிலும் முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தங்களுடைய வாக்கை செலுத்தி அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நம்முடைய மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு தினத்தன்று தொப்பி பரிசளிக்கப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரதத்திற்கும் மேற்பட்ட முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு உட்பட்டு வாக்கினை செலுத்த வேண்டும். வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை. உங்களுடைய வீட்டில் உள்ள பெரியவர்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து எடுத்துரைத்து நம்முடைய மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவை அடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.
    • போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    தருமபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சவுமியா அன்புமணி கடந்த 25-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.

    இதையடுத்து விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி டவுன் போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
    • சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ம.க.வை வேடந்தாங்கல் பறவை போல் மாறி மாறி செல்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதை அவர்கள் முழு மனதோடு தரவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்தால்தான் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று தெரிவித்தனர். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தனர்.

    அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர அ.தி.மு.க. முயற்சி செய்யவில்லை. எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

    தற்போது கூட்டணிக்காக வலை வீசினார். திருமாவளவன், சீமான் போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கூட்டணிக்கு வராததால் எங்களுக்கு அழைப்பு கொடுத்தார்.

    அதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர அக்கறை காட்டவில்லை. சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. 2 வருடமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் பா.ஜ.க. பூஜ்ஜியம் மதிப்புள்ள கட்சியாக விமர்சனம் செய்யவில்லை. எந்த கட்சியையும் தரக்குறைவாக பேசியதில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்த உடன் பெரிதாக பேசுகிறார்கள். விமர்சனம் செய்யும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட தயாரா? நாங்கள் தனியாக நிற்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை தொடங்கி நகர சாலைகள் வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி இந்த அதிரடி சோதனையை நடத்துகிறார்கள்.

    இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காரை எடுக்காத நிலையில் வாகனத்திற்கான பதிவு எண் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்தது.

    அதன் அடிப்படையில் முதற்கட்டமாக காவல்துறையினர் 4 நாட்களாக நின்று கொண்டிருந்த காரை தீவிர விசாரணை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் 4 நாட்களாக மர்ம கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    • அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரியலூர்:

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவரான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


    அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அவர் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.
    • தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    அரியலூர்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வி.சி.க தலைவர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க., கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பாளர் தாக்கல் செய்திருக்கிறோம்.

    30-ம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கூறியிருக்கிறார்.

    தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை, பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன், உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன், தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராக தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.
    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    ஆற்காட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆற்காட்டில் புதிய பஸ் நிலையம், காவனூர் மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    சோளிங்கர் பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலை கூடிய விரைவில் திறக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில் பாதை விரைந்து அமைக்கப்படும், விளாப்பாக்கம் கூட்டுறவு வங்கி, ஆற்காட்டில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததை கேட்டால் மத்திய அரசு நிதியில்லை என்று சொல்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.

    நாம் கட்டும் வரி ஒரு ரூபாயில் 29 பைசா தருவதால் மோடி பிரதமர் அல்ல மிஸ்டர் 29 பைசா.

    கவர்னர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ரவி, வின்னர் படத்தில் வரும் கைப்புள்ள கதாப்பாத்திரம் போன்றவர் கவர்னர் ஆர்.என்.ரவி.

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி ஆவர். 85 வயதிற்கு மேல் 6,13,991 வாக்காளர்கள் உள்ளனர். 4,61,730 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர்.

    * இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் பணியில் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.

    * 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

    * ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    * இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.33.31 கோடி. வருமானவரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

    * 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    * தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.
    • இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

    இந்நிலையில் இன்று கால்வாய் கரையோர மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×