என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை வகித்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் வேர்கிளம்பியில் நடைபெற்றது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி தோழர் ராஜ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக நிர்வாகி காதர் மொய்தீன் மதிமுக நிர்வாகி ஜேபி சிங், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இந்தியா கூட்டணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
    • ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வ.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ந் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய சட்ட விதிமுறைகளின் படி அ.தி.மு.க. பிரிவுகள் குறித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனு பெறும் கடைசி நாள் நெருங்குவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு புகழேந்தி வந்தார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியைச் சந்தித்து முறையிட்டார்.

    பின்னர் இது குறித்து புகழேந்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விவகாரத்திலும் தகராறுக்குரிய கட்சி என்கிற கோப்பில் வைக்கப்பட்டுள்ளதால் அது போன்று முடி வெடுக்க வேண்டும். தற்போது முடிவெடுக்க அவகாசமில்லை என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தான் உள்ளது.

    எனவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

    • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

    அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

    கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மாற்றம் வருவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து பா.ஜ.கவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 60 சதவீத வாக்குகளை பெற்று பா.ஜ.க வெற்றி பெறும்.

    நான் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டாலும் மாநில தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

    வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    இதனால் என்னால் கோவை பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.


    கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.

    இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தான் பொறுப்பேற்க வேண்டும்.

    மேலும் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் அவர்கள், மத்திய அரசு கொடுத்த நிதிகளையும் சரியாக கையாளவில்லை.

    இது தொடர்பாக அவர்களிடம் 10 கேள்விகளை நான் தருகிறேன். அதுகுறித்து விவாதம் செய்ய தயார் என்றால் அவர்களை என்னுடன் உட்கார வையுங்கள். ஸ்மார்ட் சிட்டிக்காக எத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. யாருக்கெல்லாம் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது என அவர்கள் சொல்லட்டும்.

    தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தற்போது 2 கட்சியினரும் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர்.

    வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் தி.மு.க.வினர் மூட்டை, மூட்டையாக பணத்துடன் இறங்கி உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திடீரென்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான போலீசாரின் சோதனை எவ்வாறு உள்ளது? அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சோதனைச்சாவடி இந்த எளாவூர் சோதனைச்சாவடி ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த எளாவூர் சோதனைச்சாவடி என்பது, ஆந்திர மாநிலம் இருந்து விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கான முக்கியமான நுழைவு வாயில் ஆகும். அதனால் இங்கு எல்லா வாகனங்களும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பணியில் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச்சாவடி இன்றி சுற்றி உள்ள பிற வழிகளில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஆந்திர போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பனைக்குளம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று 5 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம், மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படை மற்றும் 81 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் உரிய ஆவணங்கள் இன்றி திருச்சி மாவட்டத்தில் இதுவரை எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.27 லட்சத்து 58 ஆயிரத்து 300 சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடந்த கண்காணிப்பு பணியில் இதுவரை ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 722 மதிப்பிலான மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.

    இதில் 25-ந்தேதி மிகவும் நல்லநாள் என்பதால் அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதே போல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்றும் தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம், புதுச்சேரி முழுவதும் நேற்று வரை 780 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் பலர் வந்திருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் அப்போது வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பிறகும் கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இதுவரை 40 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மதியம் 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

    30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.
    • மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மேல் காளியம்மன் மற்றும் கீழ்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி சித்திரை மாதம் முதல் வாரம் வரை தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.

    அதேபோல், இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.

    அந்த சந்தையில் தருமபுரி மற்றும் அந்தியூர், காங்கேயம்,மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் கொண்டு வரப்பட்ட கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை விற்பனை செய்து எடுத்துச் செல்லும் பணத்திற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் கொண்டு வரப்படும் பணங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அதியமான்கோட்டையில் கூடியுள்ள மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.

    • அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.
    • சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா முதல் திருப்பத்தூர் இடையே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

    இதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஆபத்தான விபத்துகளை குறிக்கும் கரும்புள்ளிகளில், சிறிய எல்.இ.டி. புரொஜெக்டர்கள் மூலம் தானாகவே இயங்கும் எச்சரிக்கை பலகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை-பெங்களூரு சாலையில் தினமும் 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.

    தற்போது, பகல் நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், எச்சரிக்கை பலகைகள் உள்ளன. இருப்பினும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழும் போது, அதனை தடுப்பதற்கு ஏற்ற எச்சரிக்கை பலகைகள் இல்லை.

    "முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க உதவும். இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது தானியங்கி புரொஜெக்டர்கள் மூலம் சாலையின் நடுவில் கோ ஸ்லோ (மெதுவாக செல்லுங்கள்) என ஆங்கில எழுத்துக்கள் மிளிர்கின்றன.

    எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றன" இரவு நேரங்களில், சில இடங்களில் மக்கள் கடப்பதை நாம் திடீரென்று கவனிக்கிறோம்.

    அந்த இடங்களில் விபத்தை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

    சிறிய தானாகவே இயங்கும் எல்.இ.டி புரொஜெக்டர்கள் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த எச்சரிக்கை பலகைகள் சாலையின் மையத்தில் 'மெதுவாக செல்லுங்கள்', 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்' மற்றும் 'போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிதல்' போன்ற சாலை விதிகளை பிரதிபலிக்கும்.

    வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமுக்கு அருகிலும், கோணவட்டம் மற்றும் மேல்மொணவூர், பச்சை குப்பம், வெலக்கல்நத்தம் மற்றும் திருப்பத்தூரில் வளையாம்பட்டு பாலம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் விளக்குக் கம்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் தானியங்கி எச்சரிக்கை பலகைகள் இயங்கும்.

    இந்த சாதனம் தெரு விளக்குகள் எரியும் நேரமான மாலை 6 மணிக்கு அதனுடன் சேர்ந்து இயங்கும். அதன்படி காலை தெரு விளக்குகள் அனைக்கும் நேரமான காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர் இன்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வருகிறார்.

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வருகிறார். சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார். நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரசாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

    ×