search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
    X

    தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    • தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.

    23-ந்தேதி தஞ்சை, நாகையிலும், 25-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரியிலும், நேற்று (26-ந்தேதி) தூத்துக்குடியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேசினார். தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்தார்.

    மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.


    இதில் தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு களம் காணும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேச உள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பாராளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தென்காசி சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நட்டு, தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பிரசார கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று பின்னர் விமானத்தில் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். அதே போல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகளும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்படும். அத்துடன் இன்று முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×