என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும்.
    • அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கட்சி வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பா.ம.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப் படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். அனைத்துக் கூட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    2.5.2024 (வியாழக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. இளைஞரணி

    3.5.2024 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி-பா.ம.க. மாணவரணி

    4.5.2024 (சனிக்கிழமை )காலை 11 மணி- பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

    மேற்கண்ட கூட்டங்களில் தொடர்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    • தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரையில் அரசாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப் பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப, நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன் றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது.

    சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

    கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ.30 லட்சம் செலவில், 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல் யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.

    அதன் பின்னர் திருக்கல் யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.

    மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபர ணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.

    திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல் யாண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

     இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக் குள் ரிஷப லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மீனாட்சி அம்மனாக ஹாலாஸ்யநாதன் பட்டரும், சுந்தரேசுவரராக செந்தில் நாதன் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த செந்தில் நாதன் பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

     அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித் திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.

    சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல் யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாத கன்னிகைகள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண இந்த ஆண்டும் பல்லாயிரக்கானோர் திரண்டிருந்தனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

     திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கூட்டமாகவே காட்சி அளித்தது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து அளிக்கப் பட்டது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதி சென்றனர். திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, தெப்பக் குளம் மாரியம்மன் கோவில், காமராஜர் சாலை சவுராஷ் டிரா பள்ளி, பழைய குயவர்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர் 70 அடி சாலை, அரசரடி இறையியற் கல்லூரி வளாகம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

    சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள். நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

    • இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.
    • ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    காலை 11 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டது. இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.

    இது கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2.52 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 73.11 சதவீதம் வாக்கு பதிவானது. 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்களில் இந்த தேர்தலில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    4 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேர் வாக்களிக்கவில்லை. ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ராபவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் 23-ந் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சித்ரா பவுர்ணமிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 152 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 30ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 222 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 596 ஆண் வாக்காளர்களும், 6லட்சத்து 40ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 105 திருநங்கைகளும் என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 பேர் வாக்காளித்து உள்ளனர். சேலம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 7லட்சத்து 83ஆயிரத்து 17 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 44ஆயிரத்து 87 பெண் வாக்காளர்களும், 158 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 52ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 5 லட்சத்து 53ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், 5லட்சத்து 81ஆயிரத்து 525 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 35ஆயிரத்து 246 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • குண்டுவீச்சில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் இன்று அதிகாலை நவீன்குமார் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டுவீசப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார். அவரின் அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவரும் காயமடைந்தார்.

    குண்டுவீச்சில் கையில் காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. 

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    • வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க’’வேண்டுமாம். அது யாருடைய பொறுப்பு?
    • நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது?

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் நேற்று (19-4-2024) தமிழ்நாடு முழுவதிலும் நடந்தது - பல மாநிலங்களிலும் முதல் கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

    நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது.

    மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு- பல வாக்குச்சாவடிகளில் 'டோக்கன்' கொடுத்து வரிசையில் அவர்களை நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் 'சீல்' வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன!

    தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் இன்று (20-4-2024) காலை புதுப்புது வாதங்களைக் கூறி, 'ஒப்பாரி' வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை!

    வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க''வேண்டுமாம். விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு?. நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது

    தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றினார்கள்' என்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று (20-4-2024) காலை வந்து சொல்கிறார்களே, நேற்று (19-4-2024) ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கே போயினவாம்?

    சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை'' - பலன் இல்லையாம் (தமிழிசை).

    குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி. தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?

    அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ''ஆரம்பத்தில் 'அடானா' (மகிழ்ச்சி ராகம்), முடிவில் 'முகாரி' (துன்பப் பாட்டு).'' தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி ‘ஜெய்பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். இங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் 1993-ம் ஆண்டு நெல் அறுவடைப் பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்று வந்த நிலையில், கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதனை கிராமத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளனர்.

    ராஜாகண்ணு என்பவரை கைது செய்த போலீசார் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். காவல்நிலையம் சென்ற ராஜாகண்ணுவின் மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அங்கிருந்து மிரட்டி போலீசார் அனுப்பிய நிலையில், மறுநாள் ராஜாகண்ணு தப்பித்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்த நிலையில் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க முடியாததால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலமும் வழங்க உத்தரவிடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஜாகண்ணு காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பொய் சாட்சி கூறிய மருத்துவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக்கோரி ராஜாகண்ணுவின் உறவினர் தொடர்ந்த வழக்கில், போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1993-ல் கடலூர் கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி 'ஜெய்பீம்' திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×