search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruttani"

    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள தாடூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை இ.என். கண்டிகையில் திருத்தணி- சித்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே தனியார் கார் உதிர் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இந்த கம்பெனியில் திருத்தணி, ஆர்.கே. பேட்டை அரக்கோணம் சோளிங்கர், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 1500 பேர் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

    முதல் ஷிப்ட் 8 மணி முதல் ஐந்து மணிவரை. இரண்டாவது ஷிப்ட் 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என 2 ஷிப்டுகளில் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் காரின் உதிரிபாகங்களான ஸ்டேரிங், இண்டிகேட்டர், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கப்படுகிறது.

    நேற்று இரவு வழக்கம் போல் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் இரவு 2 மணிக்கு மேல் சுமார் 30 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இரவு சுமார் 2 மணி அளவில் எதிர்பாராதவிதமாக ஸ்பார்க் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மளமளவென தீ நாலாபுறமும் பற்றி எரிந்தது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

    திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருத்தணி அருகே விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த பாண்டறவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 32). நேற்று இரவு அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு அதே பகுதியை சேர்ந்த நண்பர் அரிகிருஷ்ணனுடன் (30) ஒரே மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    திருத்தணி அருகே முருகம்பட்டு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் (18), கதிரேசன் (24) ஆகியோர் மீது பாஸ்கரன்-அரிகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த பாஸ்கரன், அஜித், கதிரேசன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    அரிகிரு‌ஷணன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் திருத்தணியில் 103 டிகிரி வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது. #summer

    சென்னை:

    கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்த தொடங்கியது.

    100 டிகிரி வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அக்னி தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேல் சென்றதால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    அதன் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் குமரி, நெல்லை, கோவை, நீலகரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் வெப்பம் குறைந்து அம்மாவட்டங்களில் குளிர்ச்சியான சீதோ‌ஷன நிலை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னையில் மாலை வேளையில் பெய்தது.

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் சென்னை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது.

    திருத்தணியில் நேற்று 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. நாகையில் 101 டிகிரியும், கடலூர், மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரியும், சென்னை, வேலூர், திருச்சியில் தலா 99 டிகிரியும் பதிவானது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.  #summer

    திருத்தணி அருகே ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த தும்பிகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணக்கு ஆசிரியர் சரிவர வகுப்புக்கு வருவதில்லை என்று கடந்த ஆண்டு மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், திருத்தணி உதவி தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் மனு கொடுத்து இருந்தனர்.

    அப்போது கணக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வகுப்புக்கு சென்ற போது குற்றம் சாட்டப்பட்ட கணக்கு ஆசிரியர் மீண்டும் வகுப்புக்கு வந்தார்.

    இதனை அறிந்த மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று உள்ளனர். அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். #Tamilnews
    திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியில் உள்ள தணிகாசல அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து வந்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரகுநாதன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன், சுரேஷ் குமார், தனசேகர் பாபு ஆகியோருக்கும் ரகுநாதனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ரகுநாதனை தாக்கினர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், சுரேஷ்குமார், தன சேகர் பாபுவை கைது செய்தனர்.

    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்வெளியில் உள்ள கிணற்று நீரை பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை நல்லாத்தூர் - திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மறியல் நடந்து கொண்டிருந்த போது மேகலா என்பவர் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு குனிமாங்காடில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்ததும் தாசில்தார் நரசிம்மன், டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி, கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருத்தணி பைபாஸ் சாலை ஏரிக்கரை பகுதியில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ரவிக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் கதவை மூடிவிட்டு அறையில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். ரவிக் குமார் வேறொரு அறையில் தூங்கியதால் அவருக்கு கொள்ளை நடந்தது தெரிய வில்லை.

    இன்று அதிகாலை அவர் எழுந்தபோது வீட்டில் நகை- பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    ×