என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் பாலகுமார் (வயது 38). இவர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை பாதுகாப்பு பணி முடிந்து கோவை கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார்.
இந்த நிலையில் அவரது பெற்றோர் பாலகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் பாலகுமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகுமாரனின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாலகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கோவையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஓட்டலின் கிளைக்கு பணியாற்ற சென்று விட்டார்.
பாலகுமார் 2 குழந்தைகளையும் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளிநாட்டில் உள்ள தனது மனைவியிடம் பாலகுமார் போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் கணவர் பாலகுமாரை லண்டனில் இருந்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து பாலகுமாரின் பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்பிறகே பாலகுமார் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
- வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
- தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.
சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.
வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.
அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.

இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.
அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.
வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.
அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
- சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.
- கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
வடவள்ளி:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மலையேறி சென்று சுயம்பு லிங்கத்தை தரிசக்க உள்ளனர்.
கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி பக்தர்கள் மலையேறுவற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.
பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.
எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.
வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொடநாடு வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
- வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல் காதர் விடுமுறையில் சென்றதால், இன்று இந்த வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐடி போலீசார் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறும்போது, வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அரசு தரப்பில் சேகரித்த தடயங்கள் குறித்தும், சம்பவம் நடந்த இடங்கள் குறித்து 2 தரப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளதால் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
- 17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.
செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப்போகும் வீரரைத் தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.
தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
- போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.
ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.
இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
- வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பார்வதிபுரம் மக்கள் 7-ம் நாள் போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை காவல் துறையினரைக் கொண்டு கைது செய்த தமிழக அரசு, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப் படுவதாகவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதற்காக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கத்துடிப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 80-க்கு விற்றது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.
- 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.
- மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
திருவள்ளூர்:
ஆங்கிலத்தில் படித்தல், உச்சரித்தல், பொருள் கூறுதல் தொடர்பாக 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023–24ம் ஆண்டிற்கான மாநில மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா ஆகிய இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.
தேசிய அளவிலான போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 2 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64 மாணவ-மாணவியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றனர்.
இதில் மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் ஆங்கிலத்தில் தேசிய அளவில் அசத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
- தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






