search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட படகு - பிடிபட்ட பீடி இலை பண்டல்களை படத்தில் காணலாம்

    படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

    • ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
    • போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.

    ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

    இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×