என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
- முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
- கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
விசாரணையின்போது," சொந்த கட்சி தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜயை பார்க்க கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்...தாமதமாக வந்தது குற்றமா?
போலீஸ் மீது பழி போவில்லை. குற்றம்தான் சுமத்துகிறோம். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.
கூட்டம் குறித்து உளவுத்துறை கணித்திருக்க வேண்டாமா?"என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம் செய்யப்பட்டது.
- பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
- அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது.
திண்டுக்கல்:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய ஜோதி மணி எம்.பி. அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்பாராதவிதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட வசை பாடாமல் இருப்பது நல்லது.
தற்போதைய சூழலில் சமூக வலைதளம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனி ஊடகமாக செயல்பட்டு வருகிறது. எனவே அதனை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். நெருக்கடியான நேரத்தில் பணியாற்றியவர்கள் மீது அவதூறு பரப்ப பயன்படுத்த வேண்டாம்.
நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் தனது தவறை உணர மறுத்துள்ளார். புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு கூட்டத்தை நடத்த தெரியவில்லை. எனவே இக்கட்டான சூழ்நிலையில் தார்மீக பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு நான் இருப்பேன் என்று விஜய் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் இது அரசியல் களம் கிடையாது. மரணம் நிகழ்ந்துள்ள துயர வீடு. அந்த இடத்தில் நான் எதையுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அரசியல் செய்வது சரியானது அல்ல.
கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது இதே அருணா ஜெகதீசன் தலைமையில்தான் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. இதற்கு கரூர் மண்ணை பயன்படுத்த வேண்டாம். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசு நியமித்துள்ள ஆணையக்குழு சரியாக முடிவை அறிவிக்கும் அதன் பின்பு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றி எரிந்தது. அங்கு பிரதமர் செல்லவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வர் செல்லவில்லை. ஆனால் ராகுல்காந்தி சென்றார். நாங்கள் நினைத்திருந்தால் அங்கே ஒரு நபர் ஆணைய குழுவை அமைத்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இருந்தும் நாங்கள் அதனை விரும்பவில்லை. ராகுல் காந்தி அங்கு சென்றது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லத்தான்.
விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை வைத்து அரசியல் முடிச்சு போட்டு பேசுகிறார்கள். ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வந்த பிறகுதான் உண்மையிலேயே விஜயுடன் பேசினாரா? என்ற விபரம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்துள்ளது.
- தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமை, கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
இதற்கிடையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க தங்கள் கட்சி எம்.பி.க்கள் குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த குழு கரூரில் ஆய்வு செய்து, பலரிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து கேட்டறிந்து வருகிறது. மேலும் குழு கொடுத்த பேட்டியில் தமிழக அரசை குற்றம்சாட்டியது. குறிப்பாக தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. அனுராக் தாக்கூர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் குழு சார்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
"இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகள் என்னென்ன?
நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த சோக நிகழ்வுக்கு வழிவகுத்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு என்ன திட்டமிட்டுள்ளது? உள்ளிட்டவறிற்கான பதில்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது.
- வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
சென்னை:
கரூர் சம்பவத்தில் விஜய் மீது போலீசார் ஏன் இதுவரையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள அவர் இவ்வாறு கருத்து கூறிய நிலையில் அதற்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் திருமாவளவனிடம் இது குறித்து சிறப்பு பேட்டி காணப்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதன் நோக்கம் என்ன?
பதில்:- விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அவரை கைது செய்து சிறையில் அடக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் விஜயை போல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான். ஆனால் விஜய் மீது மட்டும் வழக்கு போடவில்லை. இது ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.
பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யும்போது ஏன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது. அவரும் அங்கு வந்து சென்றிருக்கிறார். காவல்துறை ஒரு சாரராக செயல்படுவதாக நான் அறிகிறேன்.
கே:- தி.மு.க. கூட்டணியில் தாங்கள் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கருத்து கூறுவது சரியா?
பதில்:- கரூர் சம்பவத்தை பொருத்தமட்டில் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சரியானது தான். இதை அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக ஏன் பார்க்க வேண்டும். விஜய்க்கு எதிராக பேசுவதாக ஏன் பார்க்க வேண்டும். போலீஸ் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடிய நிலையில் ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு விஜய் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருக்கலாமே?
இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை.
கேள்வி:- கரூர் சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பாடமாக அமைந்துள்ளதா?
பதில்:- இந்த சம்பவம் விஜய்க்கு மட்டும் பாடமல்ல பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பாடம்தான். பொதுக்கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வரக்கூடிய அரசியல் தலைவர்கள் அவர்களை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை கொடுத்துள்ளது. இது அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.
கேள்வி:- கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
பதில்: இந்தப் பிரச்சனை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் விஜய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., ஜி.கே.வாசன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.
தேர்தல் வரை இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டால் கவலை தருவதாக அமைந்துவிடும். இதை வைத்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.
கேள்வி:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை பற்றி?
பதில்:- கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர் நேரில் சென்றதால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய உயிர் பலி தடுத்து நிறுத்தப்பட்டது.
கேள்வி:- கரூர் சம்பவத்தில் விஜயின் அணுகுமுறை எப்படி?
பதில்:- அவருடைய பேச்சுக்கள் எல்லாம் தி.மு.க. மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் பொதுக்கூட்டத்தில் எந்த செய்தியும் கொடுக்கவில்லை. அவருடைய பேச்சு அணுகுமுறை இதே நிலையில் நீடித்தால் விஜய் பொது மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விடுவார்.
கேள்வி:- விடுதலை சிறுத்தையின் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளது?
பதில்:- விடுதலைச் சிறுத்தைகள் பொருத்தவரையில் தேர்தல் பணி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தான் தொடங்கும். புதிய மாவட்ட செயலாளர்கள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நியமிக்கப்படுவார்கள். பூத் கமிட்டி அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் ஜனவரி மாதத்தில் இருந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.
கேள்வி:- வருகின்ற தேர்தல் தி.மு.க. கூட்டணிக்கு எப்படி இருக்கும்?
பதில்:- வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. திரைப்படத்தின் அடிப்படையில் ரசிகர்கள், இளைஞர்கள் அவரிடம் இருக்கிறார்கள். அவரால் தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது. ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
- கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம்.
- பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே.
மதுரை:
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யை பார்க்க கரூரில் வெகுநேரமாக மக்கள் கூடியிருந்து உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்து உள்ளனர். சிறிது நேரத்தில் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிசிக்சை பலனின்றி பலர் இறந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசார கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் மக்கள் துயரத்தை சந்தித்ததாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இருந்தபோதும் த.வெ.க.வின் முறையான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்ட பிரசாரத்தின் காரணமாகவே பலர் இறந்து இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் என தமிழக முதலமைச்சர் நிவாரணத்தொகை அறிவித்து உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை போதுமானதாக இருக்காது.
எனவே இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள்தான் இத்தனை பேர் இறப்பதற்கு காரணம் என்பதால் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல கரூர் மாவட்டம் தாந்தோணி மலையைச் சேர்ந்த வக்கீல் தங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது மிகப்பெரிய துயர சம்பவம். பொதுவாக மத விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பேரணிகள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாகக்கூடும். அதுபோலத்தான் கரூர் சம்பவமும் நடந்து உள்ளது.
அந்த வகையில் கரூர் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததில் இருதரப்பினரும் முறையாக ஆலோசிக்கவில்லை என்பது தெரிகிறது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க அதிக அளவில் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என பொதுவான விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை.
எனவே தமிழ்நாட்டில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளையும், விரிவான வழிகாட்டுதல்களையும், விதிகளையும் உருவாக்க தமிழக அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல் செந்தில் கண்ணன் உள்பட மொத்தம் 7 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் ஆகியோர் முன்பு பகல் 11.50 மணி அளவில் தொடங்கியது.
இதில் மனுதாரர் தரப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எழுப்பப்பட்ட வாதத்திற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு தரப்பில், இந்த தகவல் அறிந்த உடன் முதலமைச்சரும் உடனுக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அன்றைய தினம் இரவில் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். கரூரில் 41 பேர் இறந்தது சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர்.
மேலும் உரிய வழிகாட்டுதல்களை டி.ஜி.பி. பிறப்பித்து இருந்தார். அதில் 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் எதையுமே த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.
பிரசாரம் செய்வதற்கு 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் அந்தப்பகுதியில் திரண்டி ருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட சோர்வு உயிரிழப்புகளுக்கு காரணமாகி விட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. உடனே நீதிபதிகள் பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதி மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எதன் அடிப்படையில் அந்தப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது?
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம். பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே. அரசின் பாதுகாப்பு அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும். மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பொதுமக்களின் உயிரை காப்பது அரசின் கடமை என்றனர்.
இதற்கிடையே த.வெ.க.வினர் தங்கள் தரப்பில் கருத்துக்களை முன்வைக்கும்போது கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். எனவே இதனை கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வாதாடினர்.
கரூரில் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் கேட்ட இடத்தில் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் குண்டர்கள் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். காலணிகளும் வீசப்பட்டன. காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று வாதிட்டனர்.
அப்போது அரசு தரப்பில் விதிகளை வகுக்கும் வரை எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள் நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் கூட்டம் நடத்தலாம் என உத்தரவிட்ட னர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் த.வெ.க. ஆதரவாளர் கே.எல்.ரவி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். ஆரம்ப நிலையிலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு எப்படி மாற்ற முடியும்? விசாரணையில் திருப்தி இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரலாம். மேலும் மனுத்தாக்கல் செய்தவர் பாதிக்கப்பட்டவரா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் எப்படி உத்தரவிட முடியும்?
நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு இழப்பீடு மற்றும் இழப்பீடு அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பில் இருந்து 2 வார காலத்திற்குள் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் அறிவுறுத்தல்
த.வெ.க. சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என விஜய் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, கடந்த 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.
- முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
- கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோன்று தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறியுள்ளார்.
- பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
- எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.
கோபிசெட்டிபாளையம்:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
* தனது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
* நான் அமைதியாக இருப்பது அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான அறிகுறி.
* எனக்கு வழிகாட்டி முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியில் பயணிக்கிறேன்.
* பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என்றார்.
இதனிடையே, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
- துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
தூத்துக்குடி :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது?
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது.
* துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
* கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜயே முதல் காரணம்.
* காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய்.
* 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே.
* இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.
* எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
- தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20-ந்தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.
வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.
ஆனால், அக்டோபர் 20-ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அது அடுத்த இரு நாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






