என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை அரசியலாக்க வேண்டாம்- ஜோதிமணி எம்.பி.
    X

    விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை அரசியலாக்க வேண்டாம்- ஜோதிமணி எம்.பி.

    • பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
    • அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது.

    திண்டுக்கல்:

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய ஜோதி மணி எம்.பி. அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்பாராதவிதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட வசை பாடாமல் இருப்பது நல்லது.

    தற்போதைய சூழலில் சமூக வலைதளம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனி ஊடகமாக செயல்பட்டு வருகிறது. எனவே அதனை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். நெருக்கடியான நேரத்தில் பணியாற்றியவர்கள் மீது அவதூறு பரப்ப பயன்படுத்த வேண்டாம்.

    நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் தனது தவறை உணர மறுத்துள்ளார். புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு கூட்டத்தை நடத்த தெரியவில்லை. எனவே இக்கட்டான சூழ்நிலையில் தார்மீக பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு நான் இருப்பேன் என்று விஜய் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் இது அரசியல் களம் கிடையாது. மரணம் நிகழ்ந்துள்ள துயர வீடு. அந்த இடத்தில் நான் எதையுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அரசியல் செய்வது சரியானது அல்ல.

    கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது இதே அருணா ஜெகதீசன் தலைமையில்தான் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

    அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. இதற்கு கரூர் மண்ணை பயன்படுத்த வேண்டாம். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசு நியமித்துள்ள ஆணையக்குழு சரியாக முடிவை அறிவிக்கும் அதன் பின்பு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றி எரிந்தது. அங்கு பிரதமர் செல்லவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வர் செல்லவில்லை. ஆனால் ராகுல்காந்தி சென்றார். நாங்கள் நினைத்திருந்தால் அங்கே ஒரு நபர் ஆணைய குழுவை அமைத்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இருந்தும் நாங்கள் அதனை விரும்பவில்லை. ராகுல் காந்தி அங்கு சென்றது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லத்தான்.

    விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை வைத்து அரசியல் முடிச்சு போட்டு பேசுகிறார்கள். ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வந்த பிறகுதான் உண்மையிலேயே விஜயுடன் பேசினாரா? என்ற விபரம் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×